செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 23 அக்டோபர் 2019 (19:30 IST)

சிறப்புகாட்சி எல்லாம் கிடையாது! அமைச்சரின் டுவிட்டால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

தளபதி விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ள நிலையில், இந்தப் படத்தை முதல்நாள் முதல் காட்சியை பார்க்க லட்சக்கணக்கான ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர் 
 
இந்த நிலையில் வரும் அக்டோபர் 25-ஆம் தேதி வெள்ளிக்கிழமை இந்த படம் அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படும் என திரையரங்க உரிமையாளர்களால் அறிவிக்கப்பட்டு அதற்கான டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டு விட்டன. ஒவ்வொரு டிக்கெட்டும் ரூ500 முதல் 2,000 ரூபாய் வரை விற்பனை ஆகியிருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இதுவரை தமிழக அரசு சிறப்பு காட்சிகளை காண அனுமதி தரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அனுமதி பெறாமலேயே சிறப்பு காட்சிகள் டிக்கெட்டுகளை விற்பனை செய்த திரையரங்கு உரிமையாளர்களுக்கு தமிழக அரசு கண்டனம் தெரிவித்துள்ளது 
 
இந்த நிலையில் பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வரும் 25 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆனால் இந்த வேண்டுகோள் கிட்டத்தட்ட நிராகரிக்கப்பட்டு இருப்பதாகவே தெரிகிறது 
 
ஏனெனில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் சற்றுமுன் தனது டுவிட்டர் பக்கத்தில் ’சிறப்பு காட்சிகள் ரத்து செய்யக் கோரி அறிக்கை அனுப்பப்பட்டு விட்டதாகவும் முன்பதிவு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம் அதிக கட்டணம் வசூலிப்பது கட்டுப்படுத்தப்படும் என்றும் பதிவு செய்துள்ளார்
 
இதனால் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கிடைக்காது என்றே தெரிகிறது. விஜய்யின் பிகில் படத்தை அதிகாலை 4 மணிக்கு பார்க்கலாம் என்ற கனவில் இருந்த ரசிகர்களுக்கு இந்த டுவீட் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது