வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 12 செப்டம்பர் 2024 (10:11 IST)

இளைஞர்களுக்கு வழிவிடுங்க! உதயநிதியை தொடர்ந்து துரைமுருகனும் வேண்டுகோள்! - ஓரம்கட்டப்படுவார்களா திமுக சீனியர்கள்?

Duraimurugan

சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின், திமுகவில் இளைஞர்களுக்கு சீனியர்கள் வழிவிட வேண்டும் என பேசியிருந்த நிலையில் தற்போது அமைச்சர் துரைமுருகனும் அதையே பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

2011ல் எதிர் கட்சி அந்தஸ்தை கூட இழந்த திமுக கடந்த 10 ஆண்டுகளில் வலுவாக வளர்ந்து ஆட்சியை பிடித்துள்ளது. தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மக்களிடையே நற்பெயரை பெரும் முயற்சிகள் ஒருபக்கம் இருக்க, திமுக கட்சியை மேலும் வலுவாக்க வேண்டியது குறித்தும் திமுக மேலிடம் ஆலோசித்து வருகிறது.

 

சமீபத்தில் நடந்த ஒரு திமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், பள்ளிக்கூடத்தில் பாஸ் ஆகியும் அடுத்த வகுப்புக்கு செல்லாமல் ஒரே வகுப்பில் பல காலமாக உட்கார்ந்திருக்கும் மாணவர்கள் போல திமுகவிலும் பல சீனியர்கள் பதவியை பிடித்துக் கொண்டிருப்பதாக கிண்டல் செய்திருந்தார். 

 

அதை தொடர்ந்து திமுக கூட்டம் ஒன்றில் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், திமுக சீனியர்கள் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்றும், அவர்களை வழிநடத்த வேண்டும் என்றும் பேசியிருந்தார். இதனால் திமுகவில் இளைஞர்களை முக்கிய பதவிகளுக்கு கொண்டு வரும் முயற்சிகள் நடந்து வருவதாக பேசிக் கொள்ளப்படுகிறது.
 

 

இந்நிலையில் வேலூரில் நடந்த திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் “நிறைய இளைஞர்கள் திமுக நோக்கி வருகிறார்கள். அவர்கள்தான் திமுகவின் பலம். நான் திமுகவில் முக்கிய பொறுப்புகளில் இணைந்தபோது இளைஞனாகதான் வந்தேன். அன்றே அண்ணா சொன்னார். நாற்றங்காலில் இருக்கும் பயிரை எடுத்து சேற்றில் நட்டால்தான் வளரும். அதனால் உங்களை கட்சியில் தகுந்த நேரத்தில் சேர்த்து நான் மாற்றுகிறேன் என்று அண்ணா சொன்னார்.

 

அதனால் இளைஞர்களுக்கு வழி விடுங்கள். அவர்கள் இல்லையென்றால் திமுக கொஞ்ச நாட்களில் பின் தங்கிவிடும். நமக்கு கொள்கைதான் முக்கியம் கொள்கை பிடிப்புடன் இருங்கள். அதுபோல உள்ளே வரும் இளைஞர்கள் தடம் பார்த்து வாருங்கள். என்ன கிடைக்கும் என்று எதிர்பார்த்து வராதீர்கள். உங்களை விட அதிகம் உழைத்தவர்கள் உங்களுக்கு முன்னால் இருக்கிறார்கள்” என்று பேசியுள்ளார்.

 

சமீபமாக சில புதிய அரசியல் கட்சிகள் தொடங்கப்பட்டு வரும் நிலையில், தற்கால இளைஞர்களை திமுகவில் தக்க வைக்க வேண்டும் என்றால் அவர்களுக்கான முக்கியத்துவத்தை கட்சியில் ஏற்படுத்த வேண்டும் என்பதால் கட்சி சீனியர்கள் விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதை திமுக தலைமை மெல்ல அவர்கள் காதில் போட்டு வைப்பதாக தெரிகிறது. விரைவில் திமுகவில் இளைஞர்கள் பலர் முக்கிய பதவிகளை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K