வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (12:39 IST)

வி.சி.க சார்பில் மது ஒழிப்பு மாநாடு.! அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு.! கூட்டணிக்கான அச்சாரமா.?

Thiruma
வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கள்ளக்குறிச்சியில் நடைபெற உள்ள மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவும் பங்கேற்கலாம் என தொல் திருமாவளவன் அழைப்பு விடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த கோரி அக்டோபர் 2 ம் தேதி விசிகவின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
 
மேலும் திமுகவிற்கும், அதிமுகவிற்கும் இடசாரி கட்சிக்கும், விசிகவிற்கும் மதுவிலக்கு கொள்கையில் உடன்பாடு உண்டு என்றாலும் ஆட்சியில் உள்ள  அரசுக்கு மதுவிலக்கை அமல்படுத்துவதில் என்ன தயக்கம் என்று தெரியவில்லை என கேள்வி எழுப்பினார். 

ராணுவத்தில் இருந்தால் மது அருந்தலாம், கேண்டீனில் மது வாங்கலாம் என்று இருக்கும் நிலை மாற வேண்டும் என்றும் மதுவிலக்கை தேசிய கொள்கையாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும் திருமாவளவன் கேட்டுக்கொண்டார். மதுவிலக்கை அமல்படுத்த முன் வரும் மாநிலங்களுக்கு வருவாய் இழப்பை ஈடு செய்ய சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
 
மனித வளத்தை பாதிக்க கூடிய மது விற்பனையை அரசே செய்வது தேசத்திற்கு விரோதமான செயல் என தெரிவித்த திருமாவளவன், தேர்தல் அறிக்கையில் கூறியபடி, மதுவிலக்கு கொள்கை திட்டத்தை திமுக அரசு உயிர்பிக்க வேண்டும் என்றும் மதுவை ஒழிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
 
மதுவுக்கு மாற்றாக கள்ளு கடை திறக்க வேண்டும் என்று கோரிக்கை வலுக்கிறதே என்ற கேள்விக்கு கள்ளு கடை உள்ளிட்ட எந்த போதை பொருளும் கூடாது என்பது தான் விசிக நிலைப்பாடு என்று அவர் குறிப்பிட்டார். விசிக-வின் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவும் வரலாம், எல்லாம் கட்சிகளும் வரலாம் என அவர் கூறினார்.

இந்த நிலைப்பாடை தேர்தல் அரசியலோடு ஒப்பிட்டு பார்க்க கூடாது எனவும் மக்கள் பிரச்சனைகளுக்காக சாதிய சக்திகளை தவிர எந்த சக்திகளோடும் இணைவோம் எனவும் திருமாவளவன் தெரிவித்தார்.

 
கூட்டணியில் இருந்து கொண்டு, ஆளுங்கட்சிக்கு எதிராக விசிக சார்பில் நடைபெறவுள்ள மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க வருமாறு அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்திருப்பது கூட்டணிக்கான அச்சாரமாக பார்க்கப்படுகிறது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.