வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 9 பிப்ரவரி 2018 (08:47 IST)

அதிருப்தியில் மைத்ரேயன் எம்.பி. - அணி மாறுகிறாரா?

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியில் தனக்கு தகுந்த முக்கியத்துவம் இல்லாததால் மைத்ரேயன் எம்.பி.அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

 
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தர்ம யுத்தம் நடத்திய போது அவருக்கு முதலில் ஆதரவு கொடுத்தவர் மைத்ரேயன் எம்.பி. அவருக்கு டெல்லியில் நல்ல உறவு இருப்பதால், அவர் மூலமாகத்தான் ஓ.பி.எஸ்-மோடி சந்திப்புகள் தொடர்ந்து நடந்தன. அதனால், மைத்ரேயனை தன்னுடனே வைத்துக்கொண்டார் ஓ.பி.எஸ்.
 
அதன்பின், எடப்பாடி-ஓ.பி.எஸ் அணி ஒன்றாக இணைந்த பின் ஓ.பி.எஸ்-ஸிற்கு துணை முதலமைச்சர் பதவி, கே.பி.முனுசாமிக்கு முக்கிய பதவிகள் என கொடுக்கப்பட்டது. ஆனாலும், எடப்பாடி அணியில் ஒ.பி.எஸ்-ஸிற்கு தகுந்த அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை. இதனால், அதிருப்தியடைந்த ஓ.பி.எஸ், மோடியை சந்தித்து முறையிட விரும்பினார். ஆனால், மோடி அவரை சந்திக்க விரும்பவில்லை. அதன்பின் மைத்ரேயனின் முயற்சியில் மோடி-ஓ.பி.எஸ் சந்திப்பு டெல்லியில் நடந்தது. ஆனால், எடப்பாடியுடன் ஒத்துப்போகுமாறு மோடி கூறிவிட வேறு வழியில்லாமல் அமைதியாகி விட்டார் ஓ.பி.எஸ்.
 
அந்நிலையில்தான், மைத்ரேயன் தனது முகநூலில் “ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணி இணைந்து இன்றோடு மூன்று மாதங்கள் நிறைவுற்று நான்காவது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?” என ஒரு பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.  அதன் மூலம், இரு அணிகளுக்கும் இடையே இன்னும் புகைச்சல் நீடிக்கிறது என்பதை அவர் உறுதி படுத்தினார். அவர் கூறியதை முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உட்பட பலரும் உறுதிப்படுத்தினர்.

 
இந்நிலையில், எடப்பாடி அணியில் தனக்கு முக்கியத்துவம் தரவில்லை என்பதால் மைத்ரேயன் எம்.பி. அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர் சமீபத்தில் தனது ஆதரவாளர்களோடு ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
 
விரைவில் அவர் அணி  மாறுவதற்கு வாய்ப்பிருப்பதாகவும், பா.ஜ.க அல்லது தினகரன் பக்கம் அவர் செல்வதற்கு வாய்ப்பிருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.