கெட்டுப்போன சிக்கன், ஊசிப்போன குழம்பு..! – மதுரை உணவகங்களில் அதிரடி ரெய்டு!
மதுரையில் கெட்டுப்போன பரோட்டா, சிக்கன் போன்ற உணவு பொருட்களை விற்ற 6 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் சவர்மா கடைகளில் கெட்டுப்போன இறைச்சிகளை பயன்படுத்தியதால் பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதுமுதலாக தமிழக மாவட்டங்கள்தோறும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அடிக்கடி உணவகங்களில் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
தற்போது மதுரை முனிச்சாலை முதல் தெப்பக்குளம் வரை உள்ள சாலையில் இயங்கி வரும் உணவகங்களில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது 6 உணவகங்களில் செயற்கை வண்ணம் பூசப்பட்ட 25 கிலோ சிக்கன், 5 கிலோ அழுகிய பழங்கள், 23 கிலோ அளவிலான கெட்டுப்போன பரோட்டா, 9 லிட்டர் ஊசிப்போன குழம்பு மற்றும் 9 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக விளக்கம் அளிக்க 6 உணவகங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதுடன், கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதமாகவும் விதிக்கப்பட்டுள்ளது. மதுரையின் பிரதான பகுதிகளில் உள்ள கடைகளில் கெட்டுப்போன உணவுகள் கண்டறியப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.