சேகர் பாபு என்னை ஒருமையில் பேசினார், முதல்வர் செயலால் வருத்தம்: வேல்முருகன்
சேகர்பாபு தான் ஒருமையில் பேசினார் என்றும், முதல்வர் என் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ததில் எனக்கு வருத்தம் என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தமிழக சட்டமன்றத்தில் இன்று, அரசு தேர்வுகளில் தமிழ் மொழியை கட்டாயமாக்க வேண்டும் என்று வேல்முருகன் பேசினார். ஆனால், அந்த கருத்துக்கள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக பேரவை தலைவர் அறிவித்தார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின், வேல்முருகன் அவையின் மாண்பை மீறி பேசியதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில், சட்டமன்றத்தில் இருந்து வெளியே வந்து விளக்கம் அளித்த வேல்முருகன், "தமிழ் படிக்காதவர்களும் தமிழக அரசின் தேர்வுகளை எழுத அனுமதி அளிக்கப்பட்டது. ஓ.பி.எஸ். ஆட்சியில் திருத்தம் செய்யப்பட்ட அந்த விதியை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தேன். ஆனால், அவை குறிப்பில் இருந்து அதை நீக்கிவிட்டார்கள்.
என்னை பேச அனுமதி வேண்டும் என்று சபாநாயகரிடம் சென்றேன். அது தவறா? அமைச்சர் சேகர்பாபு தான் என்னை ஒருமையில் பேசினார். ஆனால், அவர் என்னைப் பற்றிய தவறான தகவலை முதல்வரிடம் கூறி, அதை முதல்வரும் அப்படியே நம்பி கருத்து தெரிவித்தது எனக்கு வருத்தம் அளிக்கிறது," என்று தெரிவித்தார்.
"என் தாய்மொழி குறித்து பேச வாய்ப்பு தரவில்லை என்றால், பாயிண்ட் ஆப் ஆர்டர் எழுப்பி நேரம் கேட்க எனக்கு உரிமை உள்ளது. தமிழுக்கு எந்தப் பிரச்சனை ஏற்பட்டாலும், என் உயிரையும் தியாகம் செய்யத் தயார்," என்று அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva