மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விவாகரத்து தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை என கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் கடந்த 2018ம் ஆண்டில் முதல் திருமணத்திற்கு பின்னர் விவாகரத்து பெற்று வேறு பெண்ணை திருமணம் செய்துள்ளார், அந்த பெண்ணுக்கும் இது இரண்டாவது திருமணமாக இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு முதலாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் தங்களை சேர்த்து வைக்க வேண்டும் என அந்த பெண் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அதற்கு எதிராக தங்களுக்கு விவாகரத்து தர வேண்டுமென கணவர் கரூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கை நீதிமன்றம் ரத்து செய்தது. இதை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அவர் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் “மனுதாரர் தனது மனைவிக்கு பாலியல் நோய் உள்ளதாகவும், அவரோடு சேர்ந்து வாழ்ந்ததால் தனக்கும் பாலியல் நோய் ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் அதற்கான ஆதாரங்களை சமர்பிக்கவில்லை.
மேலும் அந்த பெண் சுய இன்பம் அனுபவிக்கும் பழக்கம் கொண்டவர், தனிமையில் ஆபாச படங்களை பார்ப்பார் என பல குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். ஆனால் அவரது மனைவி இவற்றை மறுத்துள்ளார்.
திருமணத்திற்கு பின் வேறு நபருடன் உறவுக் கொள்வதை விவாகரத்துக்கான காரணமாக ஏற்கலாம். ஆனால் சுய இன்பத்தில் ஈடுபடுவது, ஆபாச படம் பார்ப்பது திருமணத்தை முறித்துக் கொள்ள காரணமாக இருக்க முடியாது” என கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.
Edit by Prasanth.K