தீண்டாமை ஒழிப்புச் சட்டம் குறட்டை விடுகின்றதா? - பாஜக எம்.பி.க்கு ஆதரவாக கி வீரமணி அறிக்கை !
கர்நாடகா மாநிலத்தில் தீண்டாமையால் பாதிக்கப்பட்ட பாஜக எம்.பி. நாராயணசாமி க்கு ஆதரவாக கி வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கர்நாடக மாநில தும்கூர் பகுதி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பாஜக எம்.பி. நாராயணசாமி. இவர் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் ஆவார். இவர் அந்த தொகுதியில் உள்ள ஒரு ஊருக்குள் நுழைய முறபட்டபோது அவரை பிற்படுத்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் தடுத்துள்ளனர். ஒரு ஆளும்கட்சி எம்.பி.க்கே இந்த நிலைமையா எனத் தீவிரமான விவாதம் எழுந்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து திராவிடர் கழக தலைவர் கி வீரமணி ‘நாராயணசாமி பா.ஜ.க. எம்.பி., மாநிலத்திலும், மத்தியிலும் பா.ஜ.க. ஆளுகிறது என்ற நிலைமை இருக்கும்போதே, 2019 இல் இந்த ஜாதி வெறிக் கொடுமை சகிக்கப்படலாமா? தீண்டாமை ஒழிப்புச் சட்டம் குறட்டை விடுகின்றதா?
மனித சமத்துவத்திற்கு எதிரானவர்களை - அவர்கள் எந்த ஜாதியினராக இருந்தாலும், எந்தப் பிரிவினராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். தீண்டாமை ஒழிப்புச் சட்டம் இப்படி குறட்டைவிட்டுத் தூங்கலாமா? அந்த எம்.பி., புகார் கொடுக்கப் போனபோது, எஃப்.ஐ.ஆர். போடவும்கூட விருப்பமின்றி நடந்துள்ளது பயமா? அல்லது வாக்கு அரசியலா? எவ்வளவு சட்டங்கள் இருந்தும் என்ன பயன்?
அங்கு பெரியார் இயக்கம், ஜாதி ஒழிப்பு இயக்கங்கள் இருந்தால், இந்நிலை ஏற்பட்டிருக்குமா? பசவண்ணா போன்றவர்கள் பூமிதானே என்றாலும், இந்த இழிநிலையா?நம் குடியரசுத் தலைவரே பூரி கோவிலுக்குள் போக முடியவில்லையே! வெட்கம்! வேதனை!! வன்மையாகக் கண்டிக்கிறோம் - அரசுகள் வேடிக்கை பார்க்கக்கூடாது’ எனத் தெரிவித்துள்ளார்.