புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinojkiyan
Last Modified: புதன், 18 செப்டம்பர் 2019 (21:39 IST)

சௌதி அரேபியா எண்ணெய் வயல் தாக்குதல்: ஆதாரத்தை வெளியிட்டது செளதி - இரான் மீது குற்றச்சாட்டு

தங்கள் நாட்டில் உள்ள எண்ணெய் வயல்கள் மீது ஏவப்பட்ட ஆளில்லா விமானம் (ட்ரோன்) மற்றும் ஏவுகணை சிதறல்களை ஆதாரமாக காட்டியுள்ள செளதி அரேபியா, கடந்த வார இறுதியில் எண்ணெய் வயல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரானின் பங்கு இருப்பதை இது காட்டுவதாக தெரிவித்துள்ளது.
18 ட்ரோன்கள் மற்றும் 7 ஏவுகணைகள் ஏவப்பட்ட திசை ஏமனுக்கு இதில் தொடர்பில்லை என்று காட்டுவதாக சௌதி தெரிவித்துள்ளது.
 
இரான் ஆதரவளிக்கும், ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் 10 ஆளில்லா சிறிய விமானங்களை ஏவி தாக்குதல் நடத்தியதாக கூறினர்.
 
அதேவேளையில், இந்த தாக்குதலில் தங்களின் பங்கு எதுவுமில்லை என்று கூறியுள்ள இரான், எந்தவித ராணுவ நடவடிக்கையையும் சமாளிக்க தாங்கள் எதிர்தாக்குதல் நடத்த தயார் என எச்சரித்துள்ளது.
 
இந்நிலையில் செளதி அரேபிய பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கை வெளியீடு, மிகவும் மோசமடைந்து நிலையிலுள்ள கருவிகளின் சிதறல்கள் ''சந்தேகத்துக்கு இடமின்றி இரானின் ஆதரவுடன் நடந்துள்ளது'' என்பதை காட்டுகிறது என்று கூறியுள்ளது.
 
ஆனால், எந்த இடத்தில் இருந்து இந்த ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் ஏவப்பட்டன என்ற தகவல்களை தர இயலாது என்று செளதி அரேபிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
செளதி அரேபிய எண்ணெய் வயல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து இரான் மீது மேலும் தடைகள் விதிக்க, தனது நாட்டின் தொடர்புடைய அமைச்சகத்துக்கு உத்தரவிட்டதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனிடையே இந்தப் பிரச்சனை தொடர்பான வியூகத்தை சமாளிக்க செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மானை சந்திக்க அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ செளதி அரேபியாவுக்கு வருகை புரிந்துள்ளார்.
 
முன்னதாக , செளதி அரசுக்கு சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் எண்ணெய் வயல் ஒன்றைத் தாக்க ட்ரோன் மற்றும் ஏவுகணை ஏவப்பட்ட இடத்தை கண்டுபிடித்துவிட்டதாக அமெரிக்கா கூறியது.
 
இரானின் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கும், பாரசீக வளைகுடாவின் வடக்கு முனையிலிருந்தே இந்த தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளதாக ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி கூறி உள்ளார்.