திங்கள், 13 ஏப்ரல் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 14 மார்ச் 2026 (15:58 IST)

NDA கூட்டணியில் தவெக!.. விஜய்க்கு சாதகமா? பாதகமா?.. ஒரு அலசல்!..

vijay eps
நடிகராக இருந்து அரசியலுக்கு வந்திருப்பவர் விஜய். அடிப்படையில் பிரபல நடிகர் என்பதால் தனக்கு ரசிகர்கள் மற்றும் மக்களின் வாக்குகள் கிடைக்கும் என நம்பியே விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார். கட்சி துவங்கியது முதலே திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறர் விஜய். அரசியல் எதிரி திமுக.. கொள்கை எதிரி பாஜக என முதல் மாநாட்டிலேயே விஜய் அறிவித்தார். அரசியலில் 50 வருட அனுபவம் கொண்ட அதிமுக, திமுக கட்சிகளே கூட்டணி வைத்துதான் தேர்தலில் வெற்றி பெறுகிறது. ஆனால், இப்போதுவரை விஜய் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லை.

எங்களுடன் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுப்போம் என கட்சி துவங்கியதுமே சொன்னார் விஜய். ஆனால், விஜயை நம்பி யாரும் செல்லவில்லை. காங்கிரஸ் மட்டும் தவெகவிடம் பேசி வந்தது. ஆனால், தவெகவுக்கு சென்றுவிடுவோம் என சொல்லி திமுகவிடம் அதிக தொகுதிகளை வாங்கிக்கொண்டு கூட்டணியில் இணைந்துவிட்டது. விஜய்க்கு இது பெரிய ஏமாற்றம். கவலைப்படவேண்டாம். நாம் தனித்து நின்றாலே அதிமுகவை விட அதிக வாக்குகளை வாங்குவோம் என ஜான் ஆரோக்யசாமியும், ஆதவ் அர்ஜுனாவும் விஜயிடம் சொல்கிறார்கள். இதை விஜய் நம்புவதுதான் பிரச்சனை.

vijay eps

விஜய்க்கு 18 சதவீத வாக்குகள் இருக்கிறது என கருத்துக்கணிப்புகள் சொல்வதால் விஜய் நம் பக்கம் வந்தால் திமுகவை தோற்கடித்து விடலாம் எடப்பாடி பழனிச்சாமி எதிர்பார்க்கிறார் எனவும் அதிமுக தரப்பில் விஜயிடம் பேசப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் 70க்கும் மேற்பட்ட தொகுதிகள் மற்றும் ஆட்சியில் பங்கு அதாவது நீங்கள் இரண்டரை வருடம் முதல்வராக இருங்கள், விஜய் இரண்டரை வருடங்கள் முதல்வராக இருப்பார் என தவெக சொன்னதால் இந்த கூட்டணியே வேண்டாம் என எடப்பாடி பழனிச்சாமி முடிவெடுத்ததாக செய்திகள் வெளியானது..

ஆனால் பாஜகவோ ‘நீங்கள் கூட்டணிக்கு வாருங்கள் 50க்கும் மேற்பட்ட தொகுதிகளும், விஜய்க்கு துணை முதல்வர் பதவியும் கொடுக்கிறோம் எனவும் கூறி தவெகவை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் இறங்கியிருப்பதாக செய்திகள் வெளியானது. ஒருபக்கம், பவன் கல்யாண் மூலமும் விஜயை சம்மதிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக சொல்லப்பட்டது.

ஒருபக்கம் உண்மையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருவதை எடப்பாடி பழனிச்சாமி விரும்பவில்லை என்கிறார்கள் சிலர். ஏனெனில் அதிமுக தனித்து 170க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறார்கள். ஆனால் விஜய் வந்தால் அதிமுக 100 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும்.. ஏனெனில் பாஜக 40 தொகுதிகளை கேட்கிறது.. விஜய் 70 தொகுதிகளை கேட்பார். இதுபோக கூட்டணி கட்சிகள் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் கொடுத்துவிட்டால் 100க்கும் குறைவான தொகுதிகளில் மட்டுமே அதிமுக போட்டியிட முடியும். இதை எடப்பாடி பழனிச்சாமி விரும்பவில்லை என்கிறார்கள்..

vijay eps

இந்நிலையில்தான், அதிமுக - பாஜக கூட்டணியில் தவெக இணையப்போகிறார் என்கிற செய்தி நேற்று காலை முதலே ஓடிக்கொண்டிருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையலாமா என்பது தொடர்பாக புஸ்ஸி ஆனந்த் நேற்று மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ததாகவும், அப்போது பெரும்பாலானோர் திமுகவை தோற்கடிக்க வேண்டுமானால் நாம் அதிமுக - பாஜக கூட்டணியில் இணையவேண்டும், தனித்து நின்றால் வாக்குகள் கிடைக்கும். ஆனால், வெற்றி பெறமாட்டோம். அதிமுக கூட்டணிக்கு போனால் நிறைய தொகுதிகளில் வெற்றிபெறுவதோடு தளபதிக்கு துணை முதல்வர் பதவி கிடைக்கும்.. அது கௌரவமாக இருக்கும் என கூறியதாக செய்திகள் வெளியானது.

பாஜகவை தனது கொள்கை எதிரி என சொல்லி வருகிறார் விஜய். எனவே, அந்த கொள்கை எதிரியோடு விஜய் கூட்டணி வைக்கமாட்டார். அப்படி வைத்தால் பாஜகவை தமிழ்நாட்டுக்குள் கொண்டுவரத்தான் கட்சி தொடங்கினாயா? எங்களை பார்த்தா உனக்கு தற்குறி மாதிரியா தெரியுதா? என ரசிகர்கள் கேள்வி கேட்பார்கள்.. இது விஜய்க்கும் தெரியும்.

என்.டி.ஏவில் இணைந்தால் கண்டிப்பாக அது தவெகவுக்கு பாதகமாகவே அமையும். கட்சியின் எதிர்காலமும் போய்விடும். உண்மையில், அதிமுக - பாஜக கூட்டணியில் தவெக இணைந்தால் திமுகவுக்கே நல்லது.. விஜய் சங்கியாக மாறிவிட்டார் என அவரை விமர்சனம் செய்வார்கள். திமுகவின் வெற்றிவாய்ப்பு இன்னும் பிரகாசமாகிவிடும். விஜய் தனித்து நின்று வாக்குகளை பிரிப்பதுதான் திமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

முடிவு விஜயின் கையில்!..