செவ்வாய், 18 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 12 மே 2024 (10:58 IST)

தொடரும் ஜெயக்குமாரின் மர்ம மரணம்..! எரிந்த நிலையில் டார்ச் லைட் கண்டுபிடிப்பு.!

Jayakumar
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் எரிந்த நிலையில் கிடந்த டார்ச் லைட்டை போலீசார் மீட்டு விசாரித்து வருகின்றனர்.
 
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் இறந்த வழக்கு தொடர்பாகப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 2-ந்தேதி நள்ளிரவு அல்லது 3-ந் தேதி அதிகாலையில் அவர் இறந்திருக்கலாம் என்று தடயவியல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
மாயமான அன்று அவர் எங்கெல்லாம் சென்றார்? என்பது குறித்து சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் எழுதி இருந்த கடிதத்தில் பலரின் பெயர்கள் குறிப்பிட்டிருந்த நிலையில், அவர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த வழக்கில் இன்னும் துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
 
இதனிடையே 2-ந் தேதி திசையன்விளை பஜாரில் உள்ள ஒரு கடையில் இரவு 10.10 மணி அளவில் ஜெயக்குமார் சாதாரணமாகச் சிரித்து பேசிக் கொண்டிருப்பதும், அந்தக் கடையில் அவர் ஒரு டார்ச் லைட் வாங்கிக்கொண்டு வீட்டுக்குப் புறப்படும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. அவர் இறப்பில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாகப் பல்வேறு தடயங்கள் சிக்கியுள்ள நிலையில் மேலும் சில தடயங்கள் சிக்கலாம் என்ற அடிப்படையில்  தடயவியல் நிபுணர்கள் அவரது வீடு மற்றும் தோட்டத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.

 
இந்நிலையில் ஜெயக்குமாரின் உடல் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் முழுவதும் எரிந்த நிலையில் கிடந்த டார்ச் லைட் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அதனை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்த முடிவு செய்துள்ளனர்.