ஆளுநர் வேண்டாம் என சொல்லும் திமுக ஏன் அவரை சந்திக்கிறது – ஜெயக்குமார் கேள்வி !
மத்திய அமைச்சர் அமித்ஷா இந்தியைப் பொதுமொழியாக்க வேண்டும் எனக் கூறியதை போராட்டங்களை அறிவித்த திமுக ஆளுநரின் உறுதிமொழியால் அதை வாபஸ் பெற்றுக்கொண்டது.
செப்டம்பர் 14 ஆம் தேதி இந்தி தினத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி மொழியை நாடு முழுவதும் பரப்ப உள்ளதாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அமித்ஷாவுக்கும் மத்திய பாரதிய ஜனதா அரசுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதனை அடுத்து வரும் 20ஆம் தேதி இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த இருப்பதாகவும் சமீபத்தில் கூடிய திமுக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது
அதன் பின் அமித்ஷா தனது பேச்சுக்கு விளக்கம் அளித்ததை அடுத்தும் ஆளுநர் திமுக தலைவரை அழைத்து உறுதி அளித்ததை அடுத்தும் போராட்டங்களை வாபஸ் பெற்றுக்கொண்டது. இந்நிலையில் திமுகவினர் ஆளுநரை சந்தித்தது குறித்து அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ‘ நாட்டுக்கு ஆளுநரே தேவையில்லை எனக் கூறிய திமுக இப்போது ஆளுநரை சென்று சந்திப்பது ஏன் ?. அவர்களின் கட்சிட்யினருக்கே போராட்டம் நடத்துவதில் ஆர்வம் இல்லை. அதனால்தான் போராட்டங்களை வாபஸ் பெற்றுள்ளனர்’ எனக் கூறியுள்ளார்.