திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Updated : புதன், 18 செப்டம்பர் 2019 (09:06 IST)

வேலையை காட்டத்தொடங்கிய தமிழிசை: தெலுங்கானா முதல்வர் அதிருப்தி!

பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் பாஜக அரசு நியமனம் செய்த கவர்னர்கள் அத்துமீறி நடந்து கொள்வதாக ஒரு சில மாநில முதல்வர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். குறிப்பாக புதுவை மற்றும் டெல்லி கவர்னர்கள் அரசின் அதிகாரத்தில் தலையிடுவதாக புதுவை முதல்வர் நாராயணசாமி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் புகார் கூறியுள்ளனர். அதேபோல் தமிழகத்தில் ஒரு சில நேரங்களில் கவர்னர் ஆய்வு செய்து வருவதை திமுக உள்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் 
 
 
இந்த நிலையில் தெலுங்கானா கவர்னராக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்ட தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் பொதுமக்களின் குறையை கேட்க திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலால் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்கள் அதிருப்தி அடைந்து இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த விவகாரம் தெலுங்கானா அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது 
 
 
இருப்பினும் பொது மக்களை கவர்னர் சந்தித்து குறைகளை கேட்க சட்டத்தில் விதிமுறைகள் இருந்தால் அதனை நாங்கள் எதிர்க்க மாட்டோம் என தெலுங்கானா மாநில மேலளவை கொறடா பல்லா ஈஸ்வர ரெட்டி அவர்கள் கூறியுள்ளார். தெலுங்கானா கவர்னர் தமிழிசை வாரம் ஒருமுறை பொதுமக்களை சந்தித்து குறை கேட்க திட்டமிட்டிருப்பதாகவும், இந்த திட்டத்தின்படி பொது மக்களிடமிருந்து பெறும் மனுக்களை அரசுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப் போவதாகவும் தகவல்கள் வந்துள்ளது 
 
 
இந்த விவகாரத்தால் புதுச்சேரி, டெல்லி போன்றே தெலுங்கானாவிலும் முதல்வர்-கவர்னர் மோதல் வருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்