நடிகர்கள் சமூக அக்கறையுடன் செயல்படவேண்டும் - விஜய்க்கு ஜெயக்குமார் அறிவுரை
நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் போஸ்டர் விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
சர்கார் பட போஸ்டர் கடந்த மாதம் 21ஆம் தேதி வெளியானது. அதில் ஒரு போஸ்டரில் விஜய் புகைபிடிப்பது போன்ற ஒரு புகைப்படம் இடபெற்றிருந்தது. இந்த புகைப்படத்திற்கு அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. முக்கியமாக பாமக இளைஞர் அணி தலைவர், அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்தார்.
மேலும், புகைபிடித்தபடி விஜய் இருக்கும் படங்களை உடனே இணையதளங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் பொது வெளியில் இருந்து நீக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியது.
எனவே, இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், தனது சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து சர்கார் படத்தின் புகைப்பிடிக்கும் போஸ்டரை நீக்கியுள்ளது.
இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் “நடிகர்கள் சமூக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். எம்.ஜி.ஆர் சிகரெட் பிடிக்கும் காட்சியிலோ, மது அருந்தும் காட்சியிலோ நடிக்க மாட்டார். அதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்” என அறிவுரை செய்தார்.