வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Muruan
Last Modified: திங்கள், 13 நவம்பர் 2017 (11:30 IST)

சொத்துக்கள் பறிமுதல்; வங்கி கணக்குகள் முடக்கம் - சசிகலா குடும்பத்தினர் அதிர்ச்சி

சசிகலா குடும்ப உறுப்பினர்கள் முறைகேடாக சேர்த்த சொத்துக்கள் அனைத்தும், பினாமி சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


 

 
ஜெயா தொலைக்காட்சி, தினகரன், திவாகரன், நடராஜன், விவேக் உள்ளிட்ட சசிகலாவின் உறவினர்கள் என 215 இடங்களில்  வருமான வரித்துறையினர் கடந்த 4 நாட்களாக அதிரடி சோதனை செய்து வருகின்றனர். இதில் சில இடத்தில் மட்டும் சோதனை முடிவிற்கு வந்துள்ளது. இளவரசி மகன் விவேக் வீட்டில் இன்னும் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 
 
இதில், 200க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர் எனவும், பல கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு நடைபெற்றிருப்பதும், பினாமி பெயரில் பல இடங்களில் சொத்துக்கள் வாங்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.  இது தொடர்பாக பல ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மேலும், அதில் சிலருக்கு சம்மன் அனுப்பும் வேலைகளையும் அதிகாரிகள் துவங்கிவிட்டனர்.   குறிப்பாக திவாகரன், விவேக், கிருஷ்ணபிரியா, செந்தில் உள்ளிட்ட 20 பேருக்கு சம்மன் அனுப்பப்படும் எனத் தெரிகிறது.
 
இதுவரை நடந்த சோதனைகளில் ரூ.1000 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் மற்றும் முறைகேடான பரிவர்த்தனைகள் குறித்த விபரங்கள் சிக்கியுள்ளன எனக் கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் விசாரணையின் முடிவில் முறைகேடாக பினாமி பெயரில் வாங்கப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை, பினாமி சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யவும், கோடிகள் புழங்கிய வங்கி கணக்குகளை முடக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
 
எங்களின் நோக்கம் பணமோ நகையோ அல்ல என்பதும், மோசடி நிறுவனங்கள் மற்றும் பினாமி சொத்துக்கள் மட்டுமே என வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
 
இந்த விவகாரம் சசிகலா குடும்ப உறுப்பினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.