ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 30 ஜனவரி 2018 (18:50 IST)

சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை விசாரணை?: மௌன விரதம் கலைப்பாரா?

கடந்த நவம்பர் மாதம் இந்தியாவின் மிகப்பெரிய வருமான வரித்துறை சோதனையை சசிகலா, தினகரன் குடும்பத்தை குறிவைத்து வருமான வரித்துறை நடத்தியது.
 
5 நாட்கள் தொடர்ந்து நடந்த இந்த சோதனையில் 189 இடங்களில் ரெய்டு நடந்தது. இதில் 2000 அதிகாரிகள் பயன்படுத்தப்பட்டனர். இந்த ரெய்டில் சிக்கிய ஆவணங்கள், தகவல்களை வைத்து வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருகின்றது.
 
அதன்படி இளவரசியின் மகன் விவேக், மகள்கள் கிருஷ்ணப்பிரியா, ஷகீலா, டாக்டர் சிவக்குமார், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் என பலருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் முக்கிய கட்டமாக சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
 
ஏற்கனவே விசாரணை நடத்தியவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களை வைத்து சசிகலா மற்றும் இளவரசியிடம் பெங்களூர் சிறைக்கு நேரடியாக விசாரணை நடத்த வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது.
 
சசிகலாவிடம் சிறைக்கு சென்று விசாரணை நடத்த சிறப்பு அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கைகளும் தொடங்கியுள்ளது. இன்னும் சில தினங்களில் வருமான வரித்துறை விசாரணையை ஆரம்பிக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் மௌன விரதத்தில் இருக்கும் சசிகலா விசாரணைக்கு மௌனம் கலைப்பாரா என்பது கேள்விக்குறி தான்.