செந்தில் பாலாஜி – திமுகவுக்கு பிளஸ்ஸா? மைனஸா?
அமமுக அமைப்புச் செயலாளர் செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் ஸ்டாலின் முன்னிலையில் திமுக இணைந்தார்.
திமுக வில் கவுன்சிலராக இருந்த செந்தில் பாலாஜி திடீரென அதிமுக வில் இணைந்தார். அதிமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். ஜெயலலிதா தலைமையிலான 2011-2016 ஆட்சியில் அமைச்சராகவும் செயல்பட்டார். பின்பு நடைபெற்ற 2016 சட்டமனற தேர்தலிலும் அரவக்குறிச்சி தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக-வில் ஏற்பட்ட பிளவால் செந்தில் பாலாஜி டிடிவி தினகரன் பக்கம் ஒதுங்கினார். முதல்வர் எடப்பாடிப் பழனிச்சாமி மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று புகார் அளித்த 18 எம்.எல்.ஏ. க்களில் இவரும் ஒருவர். அதனால் அவரது பதவிப் பறிபோனது.
இது சம்மந்தமான வழக்கில் தீர்ப்பு டிடிவி தினகரனுக்கு எதிராக வந்ததில் இருந்து டிடிவிக்கும் இவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளதாகத் தெரிகிறது. வழக்கு சம்மந்தமாக நிறைய செலவுகள் செந்தில் பாலாஜியின் பணத்தில் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
நாட்பட்ட மனக்கசப்பின் காரணமாக அவர் நேற்று திமுக வில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் முனுமுனுப்புகளை உருவாக்கி உள்ளது. திமுக வில் இணைந்துள்ளதால் செந்தில் பாலாஜிக்கு என்ன ஆதாயம் கிடைத்துள்ளது என ஆராய்ந்தால் திமுக சார்பில் அவருக்கு மாவட்ட செயலாளர் பதவியும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எம்.பி. சீட்டும் தரப்படும் என உறுதி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேப்போல திமுக வுக்கு செந்தில் பாலாஜி என்ன ஆதாயம் என்றால், இதுவரை கரூர் தொகுதியில் திமுக வலுவான வேட்பாளர் இல்லாமல் அந்தத் தொகுதியைக் காங்கிரஸ் அல்லது மற்றக் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது. இப்போது செந்தில் பாலாஜி அந்தப் பகுதியில் வலுவான வேட்பாளராக இருந்து கட்சியைப் பலப்படுத்துவார் என திமுக எதிர்பார்க்கிறது.
அதேப் போல செந்தில் பாலாஜியால் திமுக விற்கு சில மைனஸ்களும் உள்ளன. அவருக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்படும் எனக் கூறியிருப்பதால் ஏற்கனவே உள்ள மாவட்டச் செயலாளரின் பதவிப் பறிப்போகும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது. அதேப் போல புதிதாக வந்தவருக்கு எம்.பி. சீட் கொடுக்கப்படுமென்றால் உட்கட்சிப் பூசல் உருவாதற்கும் வாய்ப்புகள் உள்ளன.