உச்சநீதிமன்றத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் – திமுக செய்த மறைமுக உதவி !
சபாநாயகருக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.கள் இருவர் வழக்குத் தொடர்ந்துள்ளதில் திமுக வழக்கறிஞர்கள் அணி மறைமுக உதவி செய்துள்ளதாகப் பேச்சு எழுந்துள்ளது.
தினகரனுக்கு ஆதரவாக இருப்பதாக கூறி அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவர் மீது அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தார். அதனையடுத்து சபாநாயகர் தனபால் 3 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.
இது 22 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பின் ஆட்சி கவிழாமல் இருக்க அதிமுக செய்யும் வேலை என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. அதனால் மூன்று எம்.எல்.ஏக்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கும் பொருட்டு சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திமுக மனு அளித்துள்ளது.
இந்நிலையில் அதிரடி திருப்பமாக குற்றம் சுமத்தப்பட்ட எடுக்கப்பட்ட மூன்று எம்.எல்.ஏக்களில் ஒருவரான கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு மீண்டும் அதிமுக அணியிலேயே இணைவதுக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. அதனால் நேற்று மதியம் அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகிய இருவரும் சபாநாயகர் தங்கள் மேல் நடவடிக்கை எடுப்பதற்குத் தடை விதிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்.
இந்த வழக்கை இருவர் சார்பாகவும் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் வாதாடுகிறார். இந்த வழக்குக்காக கபில் சிபிலை இவ்வளவுக் குறைந்த ஆஜராக வைத்ததில் திமுக வழக்கறிஞர்கள் அணிக்கு முக்கியப்பங்குள்ளது என அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.
இந்த வழக்கு அவசர வழக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டு வரும் மே 6 திங்கள் கிழமை அன்று விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.