ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 3 மே 2019 (13:39 IST)

ஒருவர் வழிக்கு வந்தார் இருவர் நீதிமன்றத்தில் வழக்கு ; சபாநாயகர் விஷயத்தில் அடுத்த நகர்வு !

சபாநாயகர் நடவடிக்கை எடுப்பதில் இருந்து தடுக்க வேண்டுமென அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

தினகரனுக்கு ஆதரவாக இருப்பதாக கூறி அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவர் மீது அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் 3 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இது தேர்தல் முடிவுகளுக்குப் பின் ஆட்சி கவிழாமல் இருக்க அதிமுக செய்யும் வேலை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. அதனால் மூன்று எம்.எல்.ஏக்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கும் பொருட்டு சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திமுக மனு அளித்துள்ளது.

இந்நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்ட மூன்று எம்.எல்.ஏக்களில் ஒருவரான கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு மீண்டும் அதிமுக அணியிலேயே இணைவதுக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகிய இருவரும் சபாநாயகர் தங்கள் மேல் நடவடிக்கை எடுப்பதற்குத் தடை விதிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்.