தவெக அலுவலகத்தில் குவியும் விருப்ப மனுக்கள்: ஆன்லைனில் விண்ணப்பிக்க பொதுச்செயலாளர் வேண்டுகோள்!
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வரும் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வெறும் 100 ரூபாய் கட்டணத்தில் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்ற அறிவிப்பை தொடர்ந்து, பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதுவரை 234 தொகுதிகளுக்கும் சேர்த்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அலுவலகத்தில் ஏற்படும் அதிகப்படியான நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, விருப்ப மனுக்களை நேரில் வந்து அளிப்பதோடு மட்டுமல்லாமல், இனி இணையதளம் வாயிலாகவும் பதிவிறக்கம் செய்து சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆன்லைன் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், பனையூர் அலுவலகத்திற்கு நேரடியாக வருவோரின் எண்ணிக்கை குறையும் என்றும், வெளியூர் நிர்வாகிகள் எளிதாக விண்ணப்பிக்க முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் விஜய்யின் இந்த புதிய அரசியல் நகர்வு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
