திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 16 ஜூலை 2024 (10:08 IST)

அடித்து வெளுக்கும் மழை! கோவை, நெல்லையில் நிரம்பி வழியும் அருவிகள், அணைகள்!

தென்மேற்கு பருவமழை காரணமாக பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வரும் நிலையில் திருநெல்வேலி, கோயம்புத்தூர் பகுதிகளில் நீர்நிலைகள் நிறைந்துள்ளன.

கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவமழை காரணமாக பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டிலும் பல பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக தென் தமிழக பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவதால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அனைத்து அருவிகளிலும் வெள்ளம் ஆர்பரித்து வருகிறது. இதனால் தொடர்ந்து மூன்றாவது நாளாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிறுவாணி அணைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்து 35.35 அடியாக உயர்ந்துள்ளது. கோவை மாவட்டம் பில்லூர் அணி முழுவதுமாக நிரம்பிய நிலையில் அணைக்கு வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி நீர் வரும் நிலையில் அது அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
 

இதனால் நீர்நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் ஆற்றில் சென்று குளிக்கவோ, செல்ஃபி எடுக்கவோ வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் மரங்கள் விழுந்து சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் சிக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K