வியாழன், 21 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 28 மார்ச் 2023 (12:03 IST)

ஒரு கூட்டம் நடத்த கூட இவனுக்கு யோகிதை கிடையாது - ஒபிஎஸ் யை ஒருமையில் பேசிய செ.ம.வேலுச்சாமி.

அதிமுகவின் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க கோரி ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு செல்லும் எனவும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் செல்லும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 
 
மேலும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்து இருந்ததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு பொதுச்செயலாளராக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார். அதற்கான சான்றிதழ் அவரிடம் வழங்கப்பட்டது. இதனை தமிழ்நாடு முழுவதும் உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். 
 
அதன் ஒரு பகுதியாக கோவை மாநகர் மாவட்ட அதிமுகவினரும் கொண்டாடி வருகின்றனர். கோவை மாவட்ட அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் இருந்து முன்னாள் மேயர் செ.ம.வேலுச்சாமி தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று அண்ணா சிலை பகுதியில் உள்ள, அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர்.
 
மேலும் இதய தெய்வம் மாளிகை முன்பு பட்டாசுகளை வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் எடப்பாடியார் வாழ்க, வருங்கால முதலமைச்சர் எடப்பாடியார் என  கோஷங்களை எழுப்பி  கொண்டாடி வருகின்றனர்.
 
இதில் செய்தியாளர்களை சந்தித்த செ.ம.வேலுச்சாமி நீதி தேவதைக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார். சிறுசிறு துருப்புகளை வைத்துக்கொண்டும் சட்டத்தின் ஓட்டைகளை வைத்துக்கொண்டும் இந்த இயக்கத்தை கெடுப்பதற்கு பார்த்துக் கொண்டிருந்த துரோகிகளுக்கு, பாடம் புகட்டுகின்ற வகையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 
 
மேலும் ஓபிஎஸ் தரப்பினர் மேல்முறையீடு செய்தால் செய்து கொண்டே இருக்கலாம் எனவும் ஒரு கூட்டம் நடத்துவதற்கு கூட யோகிதை கிடையாது எனவும் 10 பேரை கூட்டுவதற்கு கூட இவனுக்கு யோகிதை கிடையாது என ஒருமையில் விமர்சித்த அவர் நீதிமன்றத்தை வைத்து குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார். இது தொடர்ந்து கொண்டே சென்றால் தொண்டர்கள் கொந்தளிக்கக்கூடிய சூழ்நிலையும் ஏற்படும் என தெரிவித்தார்.