புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 25 ஜூன் 2024 (08:08 IST)

குலதெய்வ வழிபாட்டுக்கு எதிராக பேசினாரா ஆர்.என்.ரவி: காவல்துறையில் புகார் அளித்த ஆளுனர் மாளிகை..!

governor ragupathi
குலதெய்வ வழிபாடு குறித்து கவர்னர் ஆர்.என் ரவி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக போலி செய்திகள் பரப்பப்பட்டது குறித்து ஆளுநர் மாளிகை காவல்துறையில் புகார் அளித்துள்ளது. இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாக சமூக வலைதளங்களில் ஒரு போலி செய்தி பரவுகிறது. அந்த செய்தியில், ‘தமிழர்களை சாராயம் குடிப்பவர்களாக மாற்றுவதே குலதெய்வங்கள் தான். சாராய உயிரிழப்புகளுக்கு அடிப்படை காரணமான குலதெய்வ, நாட்டார் தெய்வ, கிராம கோயில் திருவிழாக்களை தடை செய்ய வேண்டும்’ என ஆளுநர் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஆளுநர் மாளிகைக்கு பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன.

சமூக வலைதளங்களில் பரவும் இந்த செய்தியை ஆளுநர் மாளிகை முற்றிலும் மறுக்கிறது. தவறான நோக்கத்துடன் பரப்பப்படும் போலி செய்திகளால் மக்களை தவறாக வழிநடத்தும் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறது. இதுபோன்ற தவறான தகவல்களை பரப்பும் செயல், மாநிலத்தின் மிக உயரிய பதவி வகிப்பவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களை தவறாக வழிநடத்துகிறது. அமைதியின்மையை உருவாக்குகிறது.

இந்த போலியான தகவலை பரப்பியவர்கள் பற்றி முழுமையாக விசாரணை நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் மாளிகை தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
இவ்வாறு ஆளுனர் மாளிகை அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளன.

Edited by Siva