ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 20 ஜூன் 2024 (14:16 IST)

கள்ளச்சாராய உயிரிழப்புக்கு தமிழக அரசே காரணம்..! வானதி சீனிவாசன் கண்டனம்..!!

Vanathi Srinivasan
கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து 37 பேர் பலியான சம்பவத்திற்கு தமிழக அரசே காரணம் என்றும் தமிழகத்தில் அதிகமாக விதவைகளை உருவாக்கும் மாடலாக இந்த அரசு இருந்து கொண்டிருக்கிறது என்றும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
 
தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,   இத்தனை பேர் பாதிக்கும் அளவுக்கு தமிழகத்தில் கள்ளச் சாராய விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றால், இன்னும் எந்தெந்த மாவட்டங்களில் இவையெல்லாம் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை என்றார்.
 
திராவிட மாடல் ஆட்சி என்பது தமிழகத்தை போதையில் தள்ளும் மாடலாக இருக்கிறது என்றும் ஒரு புறம் கஞ்சா, போதை பொருள்களின் விற்பனையால் சின்னஞ்சிறு சிறுவர்கள் போதைக்கு அடிமையாகும் சூழல் இருக்கிறது என்றும் மறுபுறம் டாஸ்மாக் வாயிலாக தமிழகத்தில் அதிகமாக விதவைகளை உருவாக்கும் மாடலாக இந்த அரசு இருந்து கொண்டிருக்கிறது என்றும் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

 
இச்சம்பவம் அரசே கொலை செய்வதற்கு ஒப்பானது என தெரிவித்த அவர், அரசின் இயலாமை, அலட்சியத்தையும் மக்களிடையே கொண்டு சேர்ப்போம் என்று கூறினார். கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பாஜக சார்பில் தனது ஆழ்ந்த இரங்கலை வானதி சீனிவாசன் தெரிவித்துக் கொண்டார்.