இன்று முதல் பரங்கிமலை-சென்ட்ரல் மெட்ரோ ரயில்: பொதுமக்கள் மகிழ்ச்சி
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் கடந்த 5 மாதங்களாக ஓடாத மெட்ரோ ரயில் நேற்று முன்தினம் ஓடத் தொடங்கியது என்பது தெரிந்ததே. முதல் கட்டமாக சென்னை விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப் பட்டது என்பதும் மெட்ரோ ரயிலை இயக்கிய முதல் நாள் முதலே பயணிகளின் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பதும் தெரிந்ததே
அரசு விதித்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி பயணிகள் அனைவரும் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடித்து மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர். இந்த நிலையில் அடுத்த கட்டமாக தற்போது பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரையிலான மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் தொடங்குகிறது இதனையடுத்து அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
பேருந்துகளில் பயணம் செய்வதை விட மெட்ரோ ரயிலில் பயணம் செய்வது பாதுகாப்பாக இருப்பதாக தாங்கள் உணர்வதாக பயணிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பேருந்து, மெட்ரோ ரயில் சென்னையில் இயங்க தொடங்கிவிட்டதால் சென்னை கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டதாகவே கருதப்படுகிறது