முதல்ல இடைத்தேர்தல் வரட்டும், அப்புறம் பாத்துக்கலாம்: துரைமுருகன்
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களின் தொகுதி மற்றும் மு.கருணாநிதி, ஏகே போஸ் ஆகியோர் காலமானதால் காலியான தொகுதி என மொத்தம் 20 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடைத்தேர்தலுக்கான ஆயத்தங்களை ஆளும் அதிமுக செய்து வந்தாலும் இடைத்தேர்தல் நடக்குமா? என்ற சந்தேகம் எதிர்க்கட்சிகளுக்கு உள்ளது. மழையை காரணம் காட்டி இரண்டு தொகுதிகளின் தேர்தலை தள்ளி வைத்தது போல், திமுகவை காரணம் காட்டி உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைத்தது போல், இந்த 20 தொகுதி இடைத்தேர்தலையும் ஏதாவது ஒரு காரணம் காட்டி ஆளும் அதிமுக அரசு தள்ளி வைக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர்கள் பகிரங்கமாக கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் இடைத்தேர்தல் குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் அவர்கள் கூறியபோது, '18 தொகுதிகளுக்கு முதலில் இடைத் தேர்தல் நடக்கட்டும். இடைத் தேர்தல் அறிவித்த பிறகுதான் எந்த முடிவையும் எடுப்போம்' என்று கூறினார்.
மேலும் 'வானிலையே பொய்த்து விடுகிறது, தேர்தல் வருமா இல்லையா என்று எப்படி சொல்ல முடியும்' என்று கூறிய துரைமுருகன், 'மு.க.ஸ்டாலின், தினகரன் ஆகிய இருவரும் ஒரே ஓட்டலில் தங்குவது குறித்த கேள்விக்கு, 'இரு வேறு கட்சிகளின் தலைவர்கள் ஒரே ஹோட்டலில் தங்க கூடாதா? அவ்வாறு ஒரே ஹோட்டலில் தங்கினால் ரகசிய சந்திப்பு நடந்துதான் ஆகவேண்டுமா? என்று கூறினார்