தேர்தல் செலவுகளை யார் பார்ப்பாங்க? –தினகரனுக்கு ஷாக் கொடுத்த எம்.எல்.ஏக்கள்
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் குறித்த தீர்ப்பு தங்களுக்கு பாதகமாக வந்ததும் மேல்முறையீடு குறித்த முடிவு, சம்மந்தப்பட்ட 18 எம்.எல்.ஏக்களுடன் ஆலோசித்த பின்பு அறிவிக்கப்படும் என அமமுக கட்சி பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்தார்.
இதன் பின்னர் குற்றாலத்தில் தங்கியிருந்த 18 எம்.எல்.ஏக்களையும் மதுரைக்கு வரவழைத்து அங்குள்ள ஒரு ரிசார்ட்டில் சந்தித்து ரகசிய ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு தீர்ப்பு குறித்த மேல் முறையீடும் செய்யப்படும், தேர்தலையும் சந்திப்போம் என தினகரன் சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன் பிறகு சில நாட்களுக்குப் பிறகு மேல்முறையீடு செய்யப்போவதில்லை வரப்போகும் இடைத்தேர்தலை சந்திக்கப் போகிறோம் என தினகரன் கட்சி பிரமுகர் தங்க தமிழ்ச்செல்வன் அறிவித்தார். அதற்குக் காரணமாக வழக்குத் தொடர்ந்தால் வழக்கு விசாரனை முடிய அதிக காலம் ஆகும். ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் பல அரசியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனக் கூறினார்.
தினகரன் ஆதரவாளர்களில்ன் இந்த திடீர் மனமாற்றத்திற்கு இது மட்டும் காரணம் இல்லையாம். மேலும் சில காரணங்கள் உள்ளன என அரசியல் வட்டாரத்தில் சில செய்திகள் உலாவரத் தொடங்கியுள்ளன. அவையென்னவென்றால உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் மறுபடியும் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாகவே வரும் என அஞ்சுகின்றனராம் அந்த 18 எம்.எல்.ஏக்கள்.
தினகரன் மேல் கடும் அதிருப்தியில் உள்ள சிலர் அவரிடம் ‘நாங்கள் தீர்ப்புக்கு முன்னரே சொல்லியிருந்தோம் தீர்ப்பு எதுவாகினும் மேல் முறையீடு இல்லை என்று, நாங்கள் உங்களை நம்பி இப்போது பதவியைப் பறிகொடுத்து விட்டு நிற்கிறோம். அதனால் தேர்தலை சந்திப்பதே சிறந்த முடிவு. அதுமட்டுமல்லாமல் தேர்தலுக்கான செலவை நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி இல்லையென்றால் எங்களை எங்கள் போக்கில் விட்டு விடுங்கள். நாங்கள் தனியாகத் தேர்தலை சந்தித்துக் கொள்கிறோம் எனக்கூறி தினகரனுக்கு ஷாக் கொடுத்துள்ளனர்.
இதைக் கேட்டு அதிர்ந்த தினகரன் அவர்களை சமாதானப் படுத்தும் விதமாக ‘எனக்கு நீங்கள்தான் முக்கியம், பணமல்ல. எப்போது தேர்தல் வந்தாலும் என்னால் முடிந்த நிதி உதவிகளை உங்களுக்கு நான் செய்கிறேன்’ எனக்கூறி சமாதானப் படுத்தி இருக்கிறார்.
தேர்தல் செலவை நான் பார்த்துக்கொள்கிறேன் என சொல்லிவிட்டாலும் இப்போது பயங்கர அப்செட்டில் இருக்கிறாராம் தினகரன். 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலுக்கான செலவை எப்படி தான் மட்டும் ஏற்கமுடியும் என்ற யோசனையில் இருக்கிறாராம். மேலும் இப்போதே ஒரு தொகுதிக்கு அதிகபட்சமாக எவ்வளவு செல்வாகும் என்ற கணக்கிலும் ஈடுபட்டுள்ளதாக கூறுகின்றனர் அரசியல் வட்டாரத்தினர்.