ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 2 ஏப்ரல் 2018 (10:22 IST)

காவிரி விவகாரம் : சென்னையில் பல இடங்களில் போராட்டம்

காவிரி மேலாண்மை அமைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய, மாநில அரசை கண்டித்தும் திமுகவினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

 
உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. மேலும், 3 மாத கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரம் தமிழகமெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்நிலையில், தமிழகத்தின் பல இடங்களிலும் மாணவர்களும், பொதுமக்களும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அதேபோல் திமுக உட்பட பல எதிர்கட்சிகளும் போராட்டங்களை துவக்கியுள்ளன.
 
இந்நிலையில், சென்னையில் பல இடங்களிலும் இன்று திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் மேயர் சுப்பிரமணியன் தலைமையில் சைதாப்பேட்டையில் சாலை மாறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
 
வஞ்சிக்காதே தமிழகத்தை வஞ்சிக்காதே.. அடிக்காதே தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே.. வாரியம் அமைக்கப்படும் வரை திமுக போராட்டம் என அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
 
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் “காவிரி விவகாரத்தில் மோடியும், எடப்பாடி பழனிச்சாமியும் கூட்டு சேர்ந்து தமிழகத்திற்கு துரோகம் இழைத்து வருகின்றனர். எனவே அதை கண்டித்து தொகுதிக்கு 2 இடங்கள் என திமுக போராட்டம் நடத்தி வருகிறது. சென்னையில் மட்டும் 10 இடங்களில் திமுக போரட்டத்தை முன்னெடுத்துள்ளது.  வருகிற 5ம் தேதி முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அன்று தமிழகமே ஸ்தம்பிக்கும் நிலை உருவாகும்” என அவர் கூறினார்.