திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 24 செப்டம்பர் 2020 (09:11 IST)

திமுகவில் இணைந்த எடப்பாடியார், ட்ரம்ப்!? – குழப்பத்தை உண்டாக்கிய ஆன்லைன் சேர்க்கை!

திமுக உறுப்பினர்களுக்கான ஆன்லைன் சேர்க்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெயரில் உறுப்பினர் அட்டை பெறப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் கட்சிகளுக்கான உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் திமுக ”எல்லாரும் நம்முடன்” என்ற பெயரில் எளிமையான முறையில் ஆன்லைன் மூலமாக திமுகவில் இணைவதற்கான திட்டத்தை மேற்கொண்டது.

இந்த திட்டத்தின் மூலம் எட்டு நாட்களில் 2 லட்சத்து 71 ஆயிரத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் இணைந்துள்ளதாக திமுக கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கைக்கு மொபைல் எண் மற்றும் ஓடிபி மூலம் பதிவு செய்வது மட்டுமே போதும் என்பதால் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

ஆவணங்கள் சரிபார்ப்பு முறை இதில் இல்லை என்பதால் சிலர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெயரிலும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயரிலும் சிலர் உறுப்பினர் அட்டைகளை பெற்று அதை சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ளனர்.

இந்த உறுப்பினர் அட்டைகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில் இந்த கோளாறை சரிசெய்ய திமுக தரப்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.