சென்னையில் 18 ஆண்டுகளுக்குப்பின் டபுள் டெக்கர் பேருந்துகள் சேவை.. இன்று முதல் தொடக்கம்
சென்னையில் சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 'டபுள் டெக்கர்' எனப்படும் இரட்டை அடுக்கு பேருந்து சேவை இன்று முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வருகிறது.
இன்று அகில உலக தமிழர் தினத்தை முன்னிட்டு, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இந்த சேவையை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கிறார்.
கடந்த 2008-ம் ஆண்டுடன் சென்னையில் இரட்டை அடுக்கு பேருந்துகள் பயன்பாடு நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது நவீன வசதிகளுடன் கூடிய மின்சார பேருந்துகளாக இவை மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்துகள் முதற்கட்டமாக சென்னையின் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன.
பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் விதமாகவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் அமைந்துள்ள இந்த டபுள் டெக்கர் பேருந்து சேவைக்கு சென்னை மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva