தமிழகத்தில் போராட்டம், புதுவையில் மெளனம்: திமுகவின் இரட்டை நிலை!
பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று ஆவின் பால் விலையை உயர்த்தி சமீபத்தில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, பசும்பால் கொள்முதல் விலை, 28 ரூபாயில் இருந்து நான்கு ரூபாய் அதிகரித்து 32 ரூபாய் எனவும், எருமைப்பால் கொள்முதல் விலை 35 ரூபாயில் இருந்து ஆறு ரூபாய் உயர்ந்து, 41 ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டதால் ஆவின் பால் விற்பனை விலை ஆறு ரூபாய் வரை உயர்ந்தது.
தமிழகத்தில் பால் விலையை உயர்த்தியதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். பால் விலைக்கு எதிராக திமுகவினர் ஆங்காங்கே போராட்டமும் நடத்தினர். இந்த நிலையில் திமுகவின் கூட்டணியுடன் ஆட்சி நடைபெற்று வரும் புதுவையில் நேற்று பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்படுவதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்தார். புதுவையில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கையை கருத்தில் கொண்டு பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை காத்திடவும், கறவை மாடுகள் வைத்திருப்போர் பால் உற்பத்தி தொழிலில் லாபம் அடையவும் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளதாகவும் பால்விலை உயர்வுக்கு முதல்வர் விளக்கம் அளித்தார்.
தமிழகத்தில் பால் விலை உயர்வதற்கு தமிழக அரசு கூறிய அதே காரணத்தையே புதுவை முதல்வரும் கூறியுள்ளார். அதேபோல் தமிழகத்தை போலவே புதுவையிலும் லிட்டர் ஒன்றுக்கு ஆறு ரூபாய் பால்விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த திமுக தலைவர் முக ஸ்டாலின், புதுவை அரசுக்கு கண்டனம் தெரிவிக்காமல் மெளனமாக இருப்பது ஏன்? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். திமுகவின் இந்த இரட்டை நிலைப்பாட்டை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது