1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (09:30 IST)

சென்னையில் இன்று முதல் மின்சார பேருந்து சோதனை ஓட்டம்

சென்னையில் முதன்முறையாக மின்சார பேருந்து இன்று முதல் சோதனை ஓட்ட முறையில் இயக்கப்பட உள்ளதால் பயணிகள் உற்சாகத்தில் உள்ளனர்.
 
இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்த நிலையில் தமிழகத்திற்கு முதற்கட்டமாக 100 மின்சார பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் 80 பேருந்துகள் சென்னையிலும், 10 பேருந்துகள் மதுரையிலும், 10 பேருந்துகள் கோவையிலும் இயக்கப்பட உள்ளன. 
 
இந்த நிலையில் சோதனை ஓட்ட முறையில் 2 பேருந்துகளை சென்னையில் இயக்க முடிவு செய்த தமிழக அரசு, உடனடியாக வாங்கி அந்த பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கைகளை கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வந்தது. 
 
அதன்படி, 2 புதிய மின்சார பேருந்துகளில் ஒரு பேருந்து சோதனை ஓட்டத்திற்கு தயாராகி உள்ளதாகவும், அந்த பேருந்து சென்னையில் இன்று முதல் சோதனை அடிப்படையில் இயக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை தலைமை செயலகத்தில் இந்த புதிய மின்சார பேருந்தை தொடங்கி வைக்கவுள்ளார். இந்த மின்சார பேருந்துகளை 4 மணி நேரம் சார்ஜ் செய்தால் 320 கிலோ மீட்டர் தூரம் வரை இயக்கலாம் என்பதும், 54 பயணிகள் பயணம் செய்யும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மின்சார பேருந்துகள் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றால் சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மின்சார பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது