செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 3 மே 2020 (08:14 IST)

உளவுத்துறை அதிகாரிகள் உள்பட நால்வருக்கு கொரோனா: சென்னை டிஜிபி அலுவலகத்தில் பரபரப்பு

சென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த இரண்டு உளவுத் துறை காவலர்கள் உள்பட மொத்தம் 4 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ஏற்கனவே காவல்துறையினர், சுகாதாரத்துறையினர், இராணுவத்தில் உள்ளவர்கள் என அனைவரையும் கொரோனா தாக்கி வரும் நிலையில் தற்போது சென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரியும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
டிஜிபி அலுவலகத்தில் உள்ள உளவுத்துறையில் பணிபுரிந்து கொண்டிருந்த கட்டுப்பாட்டு அறை காவலர்கள் இரண்டு பேருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதில் ஒருவர் மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் என்றும் இன்னொருவர் பெரவள்ளூர் என்ற பகுதியை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது இவர்கள் இருவரும் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் 
 
ஏற்கனவே டிஜிபி அலுவலகத்தில் பணிபுரிந்த காவலர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதை அடுத்து டிஜிபி அலுவலகத்தில் மட்டும் மொத்தம் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்களை கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்கும் பணியை மேற்கொண்டு வரும் காவலர்களுக்கே கொரோனா வைரஸ் தாக்கி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது