1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : புதன், 15 ஜனவரி 2020 (11:00 IST)

பட்டாஸ் - சினிமா விமர்சனம்

திரைப்படம் பட்டாஸ்
நடிகர்கள் தனுஷ், சினேகா, நாசர், மெஹ்ரீன் ஃபிர்ஸதா, நவீன் சந்திரா, முனீஸ்காந்த்
ஒளிப்பதிவு ஓம் பிரகாஷ்
இசை விவேக்
இயக்கம் ஆர்.எஸ். துரை செந்தில்குமார்
எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களை இயக்கிய துரை செந்தில்குமார், கொடி படத்திற்குப் பிறகு மீண்டும் தனுஷுடன் இணைந்திருக்கும் படம் இது.
 
கதையின் ஒன் - லைன் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் 'புதுமையானது'. அதாவது தந்தையைக் கொன்ற வில்லனை, மகன் பழிவாங்குவதுதான் அந்த ஒன் - லைன். சென்னையில் ஒரு சிறிய திருடனாக வாழ்ந்து வருகிறான் பட்டாஸ் (சக்தி). ஆங்காங்கே திருடிக்கொண்டு, அதே பகுதியில் வசிக்கும் சாதனாவைக் (மெஹ்ரீன் ஃபிர்ஸதா) காதலிக்கிறார். சிறையிலிருந்து வெளிவரும் ஒரு பெண்ணிடமிருக்கும் (சினேகா) பணத்தைப் பறிக்க முயற்சிக்கும்போது அவர்தான் தன் தாய் எனத் தெரிகிறது.

இதற்கிடையில், சென்னையில் மிகப் பெரிய குத்துச் சண்டை போட்டியை நடத்தத் திட்டமிடுகிறான் நீலன் (நவீன் சந்திரா). ஆனால், அவன்தான் தன் தந்தையைக் கொன்று, தாயை சிறைக்கனுப்பியவன் எனத் தெரியவருகிறது. இதற்குப் பிறகு என்ன நடக்கும்?
 
ரொம்பவுமே பழைய கதை. இந்தக் கதையை, 'அடிமுறை' என்ற சண்டைக் கலையுடன் சொல்ல முயற்சித்திருப்பதுதான் ஒரே புதிய அம்சம். ஆனால் படத்தின் திரைக்கதை, கதையைவிட பழையதாக இருக்கிறது.
 
தந்தை கொல்லப்படும்போது மகன் பிரிவது, தாய் வந்து ஃப்ளாஷ்-பேக்கில் கதை சொன்னவுடன் பழிவாங்கப் புறப்படும் மகன், தந்தை தன்னைப் புறக்கணித்து, இன்னொருவனை தூக்கிவிடுவதால் பொறாமைப்படும் மகன், சாப்பாட்டில் விஷத்தைக் கலந்து ஊரையே கொல்லும் வில்லன், கதாநாயகனுக்கு உதவுவதற்காகவே வில்லனிடம் வேலை பார்க்கும் கதாநாயகி ஆகியோரை இன்னும் எத்தனை படத்தில் பார்ப்பது?
 
படத்தின் முதல் பாதியில் இளைஞனாக, சிறு சிறு திருட்டுகளில் ஈடுபடும் தனுஷை பார்க்க ஜாலியாக இருக்கிறது. ஆனால், இடைவேளைவரை படம் எதை நோக்கிப் போகிறது என்பதே தெரியவில்லை. இடைவேளைக்குப் பிறகு, பல படங்களில் பார்த்த விஷயங்கள்தான் என்பதால், ரொம்பவுமே சோர்வு ஏற்படுகிறது.முதல் பாதியில் வரும் தனுஷும் பிற்பாதில் வரும் சினேகாவும் படத்தின் ஆறுதலான அம்சங்கள். கதாநாயகிக்கு படத்தில் பெரிய வேலை ஏதும் இல்லை. வில்லனாக வரும் நவீன் சந்திரா, ஒரு வழக்கமான வில்லன். தனுஷின் நண்பராக வருபவர் செய்யும் காமெடிகள், சில இடங்களில் மட்டும் புன்னகையை ஏற்படுத்துகின்றன.
 
சில சண்டைக் காட்சிகள், ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு ஆகியவை இந்தப் படத்தின் பாராட்டத்தக்க அம்சங்கள்.
 
இயக்குனர் துரை செந்தில்குமார், தன் முந்தைய படங்களில் இருந்தே ரொம்பவும் பின்னால் சென்றிருக்கிறார். கையோடு தனுஷையும் கூட்டிச் சென்றிருக்கிறார்.
 
BBC TAMIL