காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை தீ வைத்து எரித்த இளம்பெண்...
தன்னுடைய காதலுக்கு குறுக்கே நின்ற தனது தாயை ஒரு இளம்பெண் உயிரோடு தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜபாளையம் வேட்டை பெருமாள் கோவில் தெருவில் வசிப்பர் பாக்கியலட்சுமி(45). இவர் கணவனை பிரிந்து தனது மகள் கற்பகஜோதி(21)யுடன் வாழ்ந்து வருகிறார்.
டிப்ளமோ படித்த கற்பகஜோதி அந்தப்பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலை செய்து வருகிறார். அப்போது, அங்கு வேலை செய்யும் ஒருவருடன் அவருக்கு காதல் மலர்ந்தது. அவரையே திருமணம் செய்ய அவர் முடிவெடுத்தார். ஆனால், மகளின் காதல் விவகாரம் தெரிந்த பாக்கியலட்சுமி, அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவந்துள்ளார். இது தொடர்பாக அவர்கள் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இது தொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, பாக்கியலட்சுமி, கற்பகஜோதியின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கற்பகஜோதி, வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து பாக்கியலட்சுமி மீது ஊற்றி தீ வைத்தார்.
உடல் கருகிய பாக்கியலட்சுமி வலி தாங்க முடியால் அலறவே, அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து கற்பகஜோதியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.