ஆக்ஸிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்து ஏற்றுமதி… விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்தில் இருந்து ஆக்ஸிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்து ஆகியவை ஏற்றுமதி செய்வது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் போதுமான அளவுக்கு ஆக்ஸிஜன் கையிருப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் கொரோனா மருந்துகள் தனிநபருக்கு விற்கப்படுவதாகவும், ஆக்ஸிஜன் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் செய்திகள் வெளியாகின.
இதை சில ஊடகங்கள் செய்திகளாக வெளியிட்டன. இந்நிலையில் இந்த வழக்கை தாமாக முன் வந்து ஏற்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இதுகுறித்து இன்று பிற்பகலுக்குள் விளக்கம் அளிக்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு தலைமை அரசு வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.