1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 20 மார்ச் 2021 (11:26 IST)

தமிழக தேர்தல் 2021: வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை துவங்கியது!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை துவங்கியது. 

 
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் கடந்த 12 ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்து வந்தனர்.
 
தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் நேற்று வரை 7,133 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 6,080 பேரும், பெண்கள் 1,050 பேரும் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது.
 
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை முறையாக பின்பற்றாத வேட்பு மனுக்கள் தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் தள்ளுபடி செய்யப்பட்டு வருகின்றன. எத்தனை மனுக்கள் தள்ளுபடியாகி உள்ளது என்ற விவரம் இன்று மாலை வெளியிடப்படும். அதன்பிறகு தேர்தலில் போட்டியிட தகுதியான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். 
 
வேட்பு மனுக்களை வாபஸ் பெற விரும்புபவர்கள் திங்கட்கிழமை மதியம் 3 மணிக்குள் வாபஸ் பெற்றுக்கொள்ளலாம். இதன் பின்னர் திங்கட்கிழமை மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.