செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 1 ஜூலை 2019 (16:56 IST)

15 மாத கைக்குழந்தை அடித்துக்கொலை: வாலிபரின் வெறிச்செயல்

திருச்சி அருகே பணத்தகராறில், 15 மாத கைக்குழந்தையை, வாலிபர் ஒருவர் அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே கல்லுப்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ரெங்கர். நேற்றிரவு தனது 15 வயது ஆண்குழந்தையான நித்தீஸ்வரனை தூக்கிவைத்து கொண்டு, அப்பகுதியை சேர்ந்த அவரது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த செந்தில் என்பவர், ரெங்கருடன் பேசிக்கொண்டிருந்த ஆனந்த் என்பவரின் சட்டைப்பையில் இருந்த 70 ரூபாயை எடுக்க முயன்றுள்ளார். இதை கண்ட ரெங்கர், ஆனந்தின் சட்டைப் பையில் இருந்து எப்படி பணம் எடுக்கலாம் என்று செந்திலை தட்டி கேட்டுள்ளார்.

இதனால் ரெங்கருக்கும் செந்திலுக்கும் இடையே பெரும் தகராறு ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த செந்தில், மூங்கில் கட்டையால் ரெங்கரைத் தாக்க முயன்றுள்ளார். அப்போது ரெங்கர் விலக முயன்ற போது, குழந்தை நித்தீஸ்வரன் தலையில் அடிபட்டது. மூங்கில் கட்டையால் அடித்ததில் குழந்தையின் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.

உடனே ரெங்கர் மற்றும் அப்பகுதி மக்கள், குழந்தை நித்தீஸ்வரனை மீட்டு முசிறி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.

இந்த சம்பவம் குறித்து தொட்டியம் போலீஸார் விசாரணை நடத்தி, குழந்தையை தாக்கிய செந்திலை கைது செய்தனர். பணத்தகராறில் குழந்தை அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.