மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி: சிவகங்கையில் பரபரப்பு
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே பிரவலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன். இவர் வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பும் முகவர் தொழில் செய்து வருபவர்.
இந்நிலையில் குமரேசன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவகத்திற்கு முன்பு, தன் மீது பெட்ரோல் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். அப்போது அருகில் இருந்த போலீஸார், தீக்குளிக்க முயன்ற குமரேசனை தடுத்து நிறுத்தி , அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரனை நடத்தினர்.
அந்த விசாரணையில், குமரேசன் கீழ்ப்பூங்குடியை சேர்ந்தவர்கள் சிலரிடம், ஆஸ்திரேலியாவிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் வாங்கிகொண்டு வேலைக்கு அனுப்பவில்லை என்றும், ஆதலால் பணம் கொடுத்தவர்கள் அந்த பணத்தை திரும்ப தரும்படி நெருக்கடி கொடுத்ததால் குமரேசன் தீக்குளித்து தற்கொலை செய்வது போல் நாடகமாடியதாகவும் தெரியவந்தது.
இது குறித்து போலீசார், குமரேசனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிவகங்கை பகுதியில் வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி பல மோசடி கும்பல் ஏமாற்றி வருவதாகவும், ஆதலால் பொது மக்கள் இது போன்ற கும்பலிடம் ஏமாறாமல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.