வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: ஞாயிறு, 30 ஜூன் 2019 (18:34 IST)

தற்கொலை செய்ய இருந்த 'ஆணின் உயிரைக் காப்பாற்றிய' ஃபேஸ்புக் குழு

ஆண்களுக்கு மன ரீதியாக உதவி செய்வதற்காக தொடங்கப்பட்ட ஃபேஸ்புக் குழு ஒன்று தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே ஒருவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளதாக கூறியுள்ளது.
'மேன் சாட் அபர்தீன்' (Man Chat Aberdeen) என்று பெயரிடப்பட்டுள்ள அந்தக் குழுவை தனக்கு தற்கொலை எண்ணங்கள் உள்ளதாகக் கூறி இரண்டு குழந்தைகளின் தந்தையான ஓர் ஆண் அணுகியுள்ளார்.
 
அதற்கு சில மணி நேரங்கள் முன்னர்தான் அந்தக் குழுவை ஸ்காட்லாந்து நகைச்சுவையாளர் ரே தாம்சன் என்பவர் தொடங்கியிருந்தார்.
 
தற்கொலை எண்ணம் கொண்ட அந்த நபர் தங்கள் ஃபேஸ்புக் குழுவில் உரையாடியபின் நன்றாக உணர்ந்ததாகவும், தற்கொலை எண்ணத்தை மாற்றிக்கொண்டதாகவும் ரே தாம்சன் கூறியுள்ளார்.
 
அபர்தீன் என்பது ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு நகரத்தின் பெயர் ஆகும்.
 
கடந்த ஆண்டு ஸ்காட்லாந்தில் தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை 15% அதிகரித்துள்ளதாக பிரிட்டன் அரசின் தேசிய சுகாதார சேவையின் தரவுகள் தெரிவிக்கின்றன.
 
அந்தத் தரவுகளைப் பார்த்த பின்னர் தற்கொலைகளைத் தடுப்பதற்கான ஒரு குழுவை தொடங்குவது குறித்து தான் எண்ணியதாக தாம்சன் கூறியுள்ளார்.
 
ஃபேஸ்புக்கில் தம்முடன் உரையாடிய நபர் தமக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் இருப்பதாக கூறி, அன்றைய இரவு ஏதாவது செய்துகொள்ளலாம் என்று இருப்பதாகவும் கூறியதாக தாம்சன் கூறினார்.
 
"எங்கள் குழுவின் முதல் கூட்டத்துக்கு வருமாறு நான் அவருக்கு அழைப்பு விடுத்தேன். அவர் வரவில்லை. எனினும், அவர் முன்பைவிட நல்ல மனநிலையில் இருக்கிறார்," என்று தாம்சன் தெரிவித்தார்.