வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : வியாழன், 26 செப்டம்பர் 2019 (13:13 IST)

சென்னைக்கு வருகிறது ஒரு பெரும் ஆபத்து.. ஒரு பகீர் தகவல்

சென்னைக்கு ஒரு பெரும் ஆபத்து வர உள்ளதாக நிபுணர்கள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

உலகில் வெப்பமயமாதல் அதிகரித்து வருவதால் கடல் மட்டம் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் ஏற்படும் பருவ நிலை மாற்றத்தால், இயல்புக்கு மாறாக பல இடங்களில் மழை பெய்கிறது என்றும் மழை காலமாகியும் சில இடங்களில் மழை பெய்வது இல்லை என்றும் கூறப்படுகிறது.

உலகம் வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் உருகி கடல்நீர் மட்டம் அதிகரித்து வருவதால் உலகின் பல பகுதிகளிலும் கடல் நீர் உருக்குள் புகுவதாக பல செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பருவநிலை மாற்றம் தொடர்பாக உலக நாடுகளின் அரசு சார்பு குழு, கடல் மற்றும் பனிப்பாறை தொடர்பாக ஒரு ஆய்வறிக்கை தயாரித்து வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் 100 விஞ்ஞானிகள் ஆய்வு செய்து அளித்த அந்த அறிக்கை மனாக்கா நாட்டில் வெளியிடப்பட்டது.  அந்த அறிக்கையில் ”வெப்ப நிலை அதிகரித்து வருவதால் 20 ஆம் நூற்றாண்டில் 15 செ.மீ. அளவுக்கு நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இது இனி வரும் ஆண்டுகளின் 2 மடங்கு அதிகமாக வாய்ப்பு உள்ளது. இனி ஒவ்வொரு வருடமும் 3.6 மீ.மீ. அளவுக்கு கடல் நீர் மட்டம் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் இவ்வாறு அதிகரிக்கும் வெப்ப நிலையால், கடல் நீர் மட்டம் உயர்வது மட்டுமல்லாமல், கடற்கரையில் அரிப்பு ஏற்பட்டு கடற்கரை நகரங்கள், துறைமுகங்கள் பாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா போன்ற கடல் சூழ்ந்துள்ள நாடுகள், தீவு கூட்டங்கள் இதில் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்தியாவின் துறைமுக நகரங்களான சென்னை, மும்பை, கொல்கத்தா, சூரத் ஆகிய நகரங்களுக்கு பெரும் ஆபத்து வரவிருப்பதாகவும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்தமான் நிக்கோபார் தீவுகள் கடலில் மூழ்கிவிடும் எனவும், மேலும் 2100 ஆம் ஆண்டில் சுமார் 140 கோடி மக்கள் உலகளவில் பாதிக்கப்படுவார்கள் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் இந்தியாவின் இமயமலை பகுதியில் வசித்து வரும் மக்கள், பனி உருகுவதால் போதிய நீர் இல்லாமல் பாதிக்கப்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது. முன்னதாக கிரீன்லாந்தில் டன் கணக்காக தினமும் பனிக்கட்டி உருகிவருவதாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் தற்போது கடல் மட்டம் அதிகரிப்பதால் தமிழகம் உட்பட இந்தியா முழுவதுக்கும் ஆபத்து நேரிடும் என கூறப்படுவது அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.