கார்டு மேல பதினாலு நம்பர் சொல்லு சார்! – பேங்க் மோசடி பார்ட்டி கைது!
பேங்க்கில் இருந்து பேசுவதாக கூறி ஏடிஎம் கார்டு நம்பர்களை பெற்று மோசடி செய்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
வங்கி பரிவர்த்தனைகள் டிஜிட்டல் மயமானது பல்வேறு வசதிகளை கொடுத்து வந்தாலும், சைபர் க்ரைம் சம்பவங்களுக்கு அது எளிதில் வழி வகுத்து விடுவதாக உள்ளது. வங்கிகளில் இருந்து பேசுவதாக கூறி ஏடிஎம் கார்டு எண், ஓடிபி போன்றவற்றை பெற்று எளிதில் கொள்ளையடித்து விடுகின்றனர் சைபர் க்ரைம் ஆசாமிகள்.
சமீபத்தில் தமிழ் உச்சரிப்பே சரியாக வராத ஒரு நபர் பலருக்கு போன் செய்து ஏடிஎம் கார்டு நம்பர் கேட்ட ஆடியோக்கள் இணையத்தில் வைரலாக வலம் வந்தது. இந்நிலையில் வங்கி ஊழியர் போல போன் செய்து பேசி மோசடி செய்த ஆசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் ஆன்லைன் பிஸினஸ் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் உள்ள பலருக்கு போன் செய்து பேச்சுக் கொடுத்தப்படியே ஏடிஎம் எண்ணை பெற்று பண மோசடி செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள மயிலாப்பூர் சைபர் க்ரைம் போலீசார் ராஜ்குமாரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்த செல்போன்கள், கணினி மற்றும் 8 லட்சம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.