திங்கள், 31 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 31 மார்ச் 2025 (14:22 IST)

ரம்ஜான் தொழுகை நடந்தபோது நிலநடுக்கம்.. மியான்மரில் 700 பேர் பலியா?

myanmar
மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 முஸ்லீம்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
மியான்மர் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலாயில், ஒரே நாளில் இரு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் திடீர் தாக்கத்தால் ரிக்டர் அளவுகோலில் 7.7 மற்றும் 6.4 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
 
இந்த நிலநடுக்கத்தினால் மியான்மரில் ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மண்டலாய் விமான நிலையம் பெரிதும் சேதமடைந்தது. சாலைகள், பாலங்கள் இடிந்து போனதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டதால் மக்களுக்கு தகவல் பரிமாற்றம் கடினமாகியது. அதேபோல், ஞாயிற்றுக்கிழமையும் ரிக்டர் அளவுகோலில் 5.1 புள்ளிகள் கொண்ட அதிர்வுகள் உணரப்பட்டன.
 
மார்ச் 28ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,700ஐ கடந்து, 3,400 பேர் காயமடைந்துள்ளனர். 300 பேர் காணாமல் போயுள்ளனர், அவர்களை தேடும் பணிகள் தொடருகின்றன. இந்தியா, சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகள் மீட்புப் பணிகளுக்கு உதவி செய்து வருகின்றன.
 
இந்நிலையில்  கடந்த வெள்ளிக்கிழமையன்று ஏற்பட்ட சக்தியுள்ள நிலநடுக்கத்தில் 700 முஸ்லீம்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரமலான் மாதத்தின் வெள்ளிக்கிழமை, தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது நிலநடுக்கம் தாக்கியதால், அவர்கள் கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
 
மியான்மர் முஸ்லீம் சங்கத்தின் உறுப்பினர் துன் கி இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், "இந்த நிலநடுக்கத்தால் சுமார் 60 மசூதிகள் தீவிர சேதமடைந்தன அல்லது முற்றிலும் அழிந்துபோயின. பெரும்பாலானவை மிகப் பழமையான கட்டிடங்களாக இருந்ததால், நிலநடுக்கத்துக்கு எதிரான பாதுகாப்பு குறைவாகவே இருந்தது. அரசின் கணிப்புப்படி 1,700 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் 700 முஸ்லீம்கள் அடங்கியுள்ளனவா என்பது இன்னும் தெளிவாக இல்லை" என தெரிவித்தார்.
 
Edited by Siva