உங்க அனுமதி இல்லாம ஒருத்தரும் அணை கட்ட முடியாது! – மத்திய அமைச்சர் வாக்குறுதி!
கர்நாடகா மேகதாதுவில் தமிழகத்தின் அனுமதி இல்லாமல் அணை கட்ட முடியாது என மத்திய அமைச்சர் வாக்குறுதி அளித்திருப்பதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்ட திட்டமிட்டு வரும் நிலையில் இதை தமிழக அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்நிலையில் அணை கட்ட பசுமை தீர்ப்பாயத்தின் அனுமதி வேண்டி கர்நாடக அரசு அளித்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்நிலையில் நேற்று தமிழ்நாடு நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான தமிழக அரசு குழு டெல்லி சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் இதுகுறித்து பேசியுள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் துரைமுருகன் “கிருஷ்ணசாகர் அணையிலிருந்து வழிகிற நீர் அனைத்தும் தமிழ்நாட்டிற்கு சொந்தம். அதேபோல கபிணியிலிருந்து வழிகிற தண்ணீரும், இயற்கை அளிக்கிற மழையும் நமக்கே சொந்தம். எங்களுக்கு வருகிற தண்ணீர் தேங்கும் இடத்தில் அவர்கள் அணைக்கட்டுவது அத்துமீறுவது ஆகாதா என்று கேள்வி எழுப்பினோம். எங்கள் தரப்பு நியாயத்தை மத்திய அமைச்சர் புரிந்துகொண்டார். தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் யாரும் எந்த அணையையும் கட்ட முடியாது என அவர் வாக்குறுதி அளித்துள்ளார்” என கூறியுள்ளார்.