14 ஆயிரம் டன் அரிசி, 60 டன் மருந்துகள்! – இலங்கை புறப்பட்டது தமிழக நிவாரண கப்பல்!
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தவித்து வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் இரண்டாவது கட்ட நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகமான நிலையில் ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாடம் உணவுக்கே அல்லாடிய நிலையில் கொதித்தெழுந்த மக்கள் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர்.
இந்நிலையில் இலங்கை மக்களுக்கு உதவும் விதமாக மத்திய அரசின் அனுமதி பெற்று முதற்கட்டமாக அரிசி, உணவு பொருட்கள் மற்றும் மருந்துகளை தமிழ்நாடு அரசு கடந்த மாதம் இலங்கைக்கு கப்பல் மூலமாக அனுப்பி உதவியது.
இலங்கையில் இன்னமும் இயல்பு நிலை திரும்பாத நிலையில் தமிழ்நாடு அரசு இரண்டாம் கட்ட நிவாரண உதவிகளை இலங்கைக்கு அனுப்பியுள்ளது. 14,700 டன் அரிசி, 250 டன் பால் பவுடர், 60 டன் மருந்து உள்ளிட்ட நிவாரண பொருட்கள் கப்பல் மூலமாக இன்று தூத்துக்குடி துறைமுகம் வழியாக அனுப்பப்பட்டுள்ளன.