வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 26 ஜூன் 2024 (13:08 IST)

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்..! சட்டப்பேரவையில் தனி தீர்மானம் நிறைவேற்றம்..!!

Stalin
சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தக்கோரி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.
 
தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், சமீபகாலமாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக பேசப்பட்டு வருகிறது என்றும் இதே பேரவையில் நேற்றுமுன் தினம் கூட பாமக உறுப்பினர் ஜிகே மணி, சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்த வேண்டும் என பேசினார் என்றும் தெரிவித்தார்.
 
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது தான் திமுகவின் எண்ணமும் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948ன் கீழ் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய பணி என்றும் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்து 100 ஆண்டுகளுக்கும் மேலாக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அரசால் நடத்தப்பட்டு வரும் பணி என்றும் மக்கள் தொகை தொடர்பான புள்ளி விவரங்கள் அனைத்தும் இக்கணக்கெடுப்பு மூலம் சேகரிக்கப்பட்டு மத்திய அரசால் தொகுத்து வெளியிடப்படுகிறது என்றும் முதல்வர் கூறினார்.
 
பொதுவெளியில் தவறாக சொல்லப்படும், புள்ளிவிவர சட்டம் 2008ன் கீழ் மாநில அரசு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த இயலாது என்று அவர் தெரிவித்தார். சட்டப்படி, நிலைக்க கூடிய கணக்கெடுப்பு என்றால் மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தின் கீழ் தான் மேற்கொள்ள வேண்டும் என்றும் எனவே தான் இப்பணியை மத்திய அரசு மேற்கொள்வது தான் முறையாக இருக்கும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
 
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ள வேண்டிய அடிப்படையான பணியான மக்கள் தொகை கணக்கெடுப்பினை 2021ம் ஆண்டு மேற்கொள்ளாமல் மத்திய அரசு இன்று காலம் தாழ்த்தி வருகிறது என்று அவர் குற்றம் சாட்டினார். கோவிட் தொற்று முடிந்து 3 ஆண்டுகள் கடந்தும் அப்பணியை மேற்கொள்ளாமல் இருப்பது மத்திய அரசு தனது கடமையைப் புறக்கணிக்கும் செயல் என்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு உடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் உடனடியாக நடத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடந்த ஆண்டே கடிதம் எழுதியுள்ளேன் என்றும் அவர் கூறினார். 
 
மத்திய அரசு இந்தப் பணியை மேற்கொள்ளும் போது கிடைக்கும் புள்ளி விவரங்கள் அடிப்படையில் மாநில அரசு எடுக்கும் முடிவுகள், இயற்றும் சட்டங்களுக்கு சட்டப் பாதுகாப்பு இருக்கும் என்றும் மாறாக அந்தந்த மாநில அரசுகள் ஒரு சர்வே என்ற பெயரில் புள்ளி விவரங்களை சேகரித்து அதனை சட்டமாக மாற்றினால் நீதிமன்றங்களில் ரத்து செய்யப்படும் வாய்ப்புள்ளது என்றும் முதல்வர் குறிப்பிட்டார்.

இந்த காரணங்களின் அடிப்படையில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு உடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தீர்மானத்தை முன்மொழிகிறேன்  என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். 


இதற்கிடையே, முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் மீது உறுப்பினர்கள் தங்கள் கருத்தை தெரிவித்தனர். தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் தனித்தீர்மானம் நிறைவேறியது.