புதன், 6 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 24 ஜூன் 2024 (15:02 IST)

தமிழக மீனவர்கள் விவகாரம்..! மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!

MK Stalin
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
 
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், எனது முந்தைய கடிதத்தில் சுட்டிக் காட்டியது போன்று மீனவர்களை கைது செய்தல் மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்கள் தொடர்வதால் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் மீனவர்கள் சமுதாயத்தினரிடையே மிகுந்த அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை (ஜூன் 22) அன்று, ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள், IND-TN-10-MM-84, IND-TN-10-MM-88 மற்றும் IND-TN-10-MM-340 ஆகிய பதிவு எண்களைக் கொண்ட மூன்று இயந்திரப் படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
எனவே, இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அதேநேரம், ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட படகுகளை இலங்கையில் இருந்து கொண்டு வருவதற்கு மீட்புப் படகுகள் மற்றும் பணியாளர்களுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

அதேபோன்று, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை சந்தித்து, அவர்களுக்கு ஆறுதலும் அடிப்படைத் தேவைகளையும் வழங்கிட அனுமதி தர வேண்டுமென தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு மீனவர் சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளைக் கனிவுடன் பரிசீலிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
 
மீனவர்களின் வாழ்வை சீர்குலைக்கும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண உடனடியாக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக ஏற்கெனவே அமைக்கப்பட்ட கூட்டுப் பணிக்குழுவினை மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.


இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண இலங்கை அதிகாரிகளிடம் எடுத்துரைத்திட உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.