திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 25 ஜூன் 2024 (13:47 IST)

மீனவர் பிரச்சனைக்கு கடிதம் எழுதினால் மட்டும் போதுமா? முதல்வருக்கு டிடிவி தினகரன் கேள்வி..!

இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு கடிதம் எழுதினால் மட்டும் போதுமா? என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி கைது செய்யும் இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறல் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் . கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். 
 
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 22 தமிழக மீனவர்கள் தற்போதுவரை  விடுவிக்கப்படாத நிலையில், நேற்று நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.  
 
மீன்பிடி தடைக்காலமான இரண்டு மாதகாலம் கடலுக்குள் செல்லாமல் லட்சக்கணக்கில் பணத்தை செலவு செய்து தங்களின் படகுகளை பழுதுநீக்கி கடலுக்குள் சென்ற மீனவர்களை,  எல்லை தாண்டியதாக கூறி கைது செய்துவரும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் சம்பவம் தொடர்கதையாகி வருவது கடும் கண்டனத்திற்குரியது. 
 
மீனவர்களின் கைதை தடுத்து நிறுத்தவும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை தாயகம் அழைத்துவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், மேலும் 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  
 
ஒவ்வொரு முறை மீனவர்கள் கைது செய்யப்படும் போதும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதோடு மட்டுமே தன் கடமை நிறைவடைந்து விட்டதாக கருதாமல், தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களை நேரில் சந்தித்து  தமிழக மீனவர்களின் கைதை தடுத்து நிறுத்துவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை இனியாவது மேற்கொள்ள வேண்டும். 
 
Edited by Siva