அதிமுக உள்விவகாரத்தில் பாஜக தலையிடாது - ஜெயகுமார் பேட்டி
அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி. அதில் அவர் கூறியதாவது...
அ.தி.மு.கவில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்தில் இருந்த எழுச்சியை தற்போதும் பார்க்க முடிகிறது. இந்த எழுச்சியை பாக்கும்போது, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா அலை வீசுகிற நிலையில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்.
அ.தி.மு.கவினர் விருப்ப மனு அளிக்கும் காட்சியை பார்க்கும் போது வரலாறு படைக்கும் கட்சியாக அ.தி.மு.க உள்ளது. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆட்சி மலர வேண்டும் என்பதே தமிழக மக்களின் கருத்தாக உள்ளது. எங்களை யாரும் நிர்பந்தபடுத்த முடியாது, அ.தி.மு.கவின் உட்கட்சி விவகாரங்களில் பாரதிய ஜனதா கட்சி என்றைக்கும் தலையிட்டது கிடையாது.
முதல்வர் தெரிவித்தது போல், அ.ம.மு.கவும், சசிகலாவும் அ.தி.மு.கவில் இணைவதற்கு எந்த சாத்தியமும் இல்லை அது நூறு சதவீதம் வாய்ப்பே இல்லை. இதுவே உறுதியான நிலை, கட்சியின் நிலை. அ.ம.மு.க குள்ள நரிகள் கூட்டம், அ.தி.மு.க சிங்கங்கள் கூட்டம்.
கூட்டணி பேச்சு வார்த்தையை தொடங்கி முதல் கட்டமாக பா.ம.கவுடன் தொகுதி உடன்பாட்டை அறிவித்தது அ.தி.மு.கதான். தி.மு.க கூட்டணி பேச்சு வார்த்தை மனக்குமுறல், பூசல்களுடன் நீடிக்கிறது. அ.தி.மு.க கூட்டணி பேச்சு வார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது.
அ.தி.மு.க கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். ஜெயலலிதா அவர்கள் விசன் 2023 என்ற தொலை நோக்கு திட்டத்தை கொடுத்து அதன் மூலம் பல விருதுகளை தமிழகம் பெற்றுள்ளது. ஆனால், ஸ்டாலினுக்கு தற்போதுதான் ஞானோதயம் உதித்துள்ளது.
தி.மு.க ஆட்சியின்போது என்ன திட்டங்களை கொண்டு வந்தனர். கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்து வருகின்றனர் தி.மு.கவினர். அ.தி.மு.க கூட்டணி பேச்சு வார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் முடியும் என தெரிவித்துள்ளார்.