1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 30 டிசம்பர் 2025 (16:32 IST)

திருத்தணியில் தாக்கப்பட்ட வடமாநில இளைஞர் இப்போது எங்கே இருக்கிறார்? வடக்கு மண்டல ஐ.ஜி விளக்கம்..!

திருத்தணியில் தாக்கப்பட்ட வடமாநில இளைஞர் இப்போது எங்கே இருக்கிறார்? வடக்கு மண்டல ஐ.ஜி விளக்கம்..!
திருத்தணி ரயில் நிலையம் அருகே ஒடிசாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் விரிவான விளக்கம் அளித்துள்ளார். பாதிக்கப்பட்டவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் இந்த தாக்குதல் நடந்ததாக பரவும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்று அவர் மறுத்துள்ளார்.
 
கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி, ஒடிசா இளைஞர் ரயிலில் பயணம் செய்தபோது 17 வயதுடைய நான்கு சிறுவர்கள் அவருடன் பயணித்துள்ளனர். ரயிலில் அந்த சிறுவர்கள் 'ரீல்ஸ்' எடுத்துக்கொண்டிருந்தபோது, இளைஞர் அவர்களை முறைத்து பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமிகளான அந்த சிறுவர்கள், இளைஞரை வலுக்கட்டாயமாக ரயில் நிலையத்தில் இறக்கி, பட்டா கத்தியால் கொடூரமாக தாக்கி அதனை வீடியோவாக பதிவிட்டுள்ளனர்.
 
காவல்துறையினர் உடனடியாக செயல்பட்டு நான்கு சிறுவர்களையும் கைது செய்து கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் மூவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட இளைஞர் உரிய சிகிச்சை பெற்று தற்போது தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அவர் உயிரிழந்துவிட்டதாக பரவும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும், வன்முறையைத் தூண்டும் விதமாகச் சமூக வலைதளங்களில் செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஐ.ஜி. எச்சரித்துள்ளார்.
 
Edited by Mahendran